மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் – எல்லே குணவங்க தேரர் பிரதமரிடம் வலியுறுத்தல்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களை வதைக்கும் வகையில் வரி அதிகரிப்பதை விடுத்து, மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்க தேரர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தினார்.
மின்கட்டணத்தை அதிரகித்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.மக்கள் படும் துயரத்தை உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள் எனவும் வலியுறுத்தினார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கதாகவும், மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்துவதாகவும் உள்ளது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாட்டு மக்களை வதைக்கும் வகையில் வரி அதிகரிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு நாட்டு மக்கள் பொறுப்பு கூற வேண்டிய தேவை இல்லை. அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளும்,அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளது.
மின்கட்டணத்தை அதிகரிப்பதை விடுத்து மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் எனது விகாரையின் ஒருமாத மின்கட்டணம் 10 ஆயிரம் அளவில் இருந்தது,ஆனால் தற்போது ஒருமாத மின்கட்டணம் 48 ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
இந்த மின்கட்டணத்தை நாங்கள் எவ்வாறு செலுத்துவது.மின்கட்டணம் அதிகரிப்பு என்பதால் விகாரைகளை இருளில் வைக்க முடியுமா,
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்தால் சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்படும்.ஆகவே மக்கள் தொடர்பில் அரசாங்கம் உணர்வு பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றார்.