கிழக்கு மாகாணத்தை இழக்க வேண்டிய அபாயம் – சாணக்கியன் எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்தை இழக்க வேண்டிய அபாயம் – சாணக்கியன் எச்சரிக்கை

தமிழர்களும் முஸ்லிம்களும் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து செயற்படாத பட்சத்தில் அடுத்த 75 ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தை முழுமையாக இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் இல்லாது போகும் அபாயம் காணப்படுவதாக மருதமுனையில் இடம்பெற்ற இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ தமிழ் மொழியினால் கிறிஸ்தவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம்.

வடக்கு கிழக்கில் கூட தமிழ் மொழியின் ஊடாக தான் எமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.

1948 ஆம் ஆண்டில் இருந்து எமது இனங்களுக்கிடையிலான விகிதாசாரங்களை சம்பந்தன் ஐயா ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு புள்ளிவிபரவியல் ஒன்றினை வைத்திருக்கின்றார். 90 வயதிலும் இவ்வாறான ஆய்வுகளை சம்பந்தன் ஐயா மேற்கொள்கின்றார்.

சம்பந்தன் ஐயாவினை பற்றி நான் சில இடங்களில் அவர் கார் மாதிரி என்று குறிப்பிட்டுள்ளேன். அந்தக் காரின் டயர் கொஞ்சம் தேய்ந்து உள்ளது. ஆனால் இயந்திரம் நன்றாக ஓடுகின்றது. அப்படி தான் அவர் தற்போது இவ்வாறான புள்ளிவிபரங்களை வைத்திருக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஏனைய மாகாணங்களை விட பெரும்பான்மை சமூகத்தினர் 800 வீதத்தினால் அதிகரித்துள்ளனர்.

அதிலும் அம்பாறை மாவட்டத்தில் தான் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே வடக்கு – கிழக்கில் உள்ள நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும்” – என்றார்.

CATEGORIES
Share This