தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்!

தேவாலயத்தில் நத்தார் வழிபாட்டின்போது பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் – மாதம்பை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நத்தார் வழிபாட்டின்போது எட்டு தேவாலயங்களுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளை பரிசோதித்தபோது, சிறிய கறுப்புப் பெட்டியொன்றில், இரண்டு ரீ-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாதம்பை புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு மேலதிகமாக மெதகம, இரத்தினகிரிய கோபியவத்த, இரட்டைகுளம், ஹரேந்திரகம, தரான ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களிலும் நத்தார் ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தேவாலயங்களுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் அனைத்தும் மாதம்பை புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட காணிக்கைகளுடன் சேகரிக்கப்பட்டு ஊழியர் ஒருவரால் சரிபார்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஒரு வெள்ளை பைக்குள் இந்த சிறிய பிளாஸ்டிக் பெட்டியை கண்டுபிடித்ததாகவும், அதை திறந்து பார்த்தபோது, அதனுள் தோட்டாக்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் இரண்டு உயிர்புள்ள தோட்டாக்கள் தவிர, தேவையற்ற முடிகளை அகற்றும் கருவிகள் மற்றும் தங்கத்தை எடைபோட பயன்படுத்தப்படும் 6 சிறிய அளவீட்டு கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.