டைனோசர் போன்றே பென்குயின்கள் அழியும் அபாயம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

டைனோசர் போன்றே பென்குயின்கள் அழியும் அபாயம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தற்போதைய உலகளாவிய கார்பன் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு தொடர்ந்தால், 65 சதவீதத்திற்கும் அதிகமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அழிந்துவிடும் என்று ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதல் காரணமாக அதிகப்படியான ஆர்டிக் பனிப்பாறைகள் உருகி வரும் நிலையில் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிக் பகுதிகளும் அழிவின் விளிம்பை நோக்கி செல்வதாகவும் , அதிக எண்ணிக்கையிலான அண்டார்டிக் உயிரினங்கள் அழிந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

12 நாடுகளில் உள்ள 28 நிறுவனங்களின் விஞ்ஞானிகள், இயற்கை பாதுகாவலர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான சர்வதேச ஒத்துழைப்பின் கீழ் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.

அண்டார்டிக் பகுதி என்று சொன்னாலே அனைவரின் நினைவுக்கு வருவது பென்குயின் இனங்கள். முக்கியமாக எம்பெரர் பென்குயின் எனப்படும் இனம் அண்டார்டிக் பகுதிக்கு உரிய தனித்துவ விலங்கு. காலநிலை மாற்றத்தால் ஏற்கனவே இந்த பென்குயின்களில் மரபணு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

உருவங்களில் மாற்றம், இனப்பெருக்க சுழற்சி குறைபாடு இருந்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இன பெருக்கம் இன்றி குறைந்து வரும் நிலையில், வணிக பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் அதிகரிப்பு காரணமாக 2100 ஆம் ஆண்டிற்குள் 80% எம்பெரர் பென்குயின்கள் அழிந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் , PLOS பயாலஜி இதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வில் அதிக ஆபத்தில் உள்ள இனங்களின் பட்டியலில் எம்பெரர் பெங்குவினைத் தொடர்ந்து அண்டார்டிக் ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள கடல் பறவைகள் மற்றும் உலர் மண் நூற்புழுக்களும் அழிவின் விளிம்புநிலைக்கு தள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அண்டார்டிகா ஒப்பந்தத்தின் நெறிமுறை மூலமாக அண்டார்டிகா நேரடியாக மனிதர்களின் தாக்குதல், ஆராய்ச்சி, தாது சுரண்டல்களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வந்தாலும் மறைமுகமாக ஏற்படும் இந்த புவி வெப்பமயமாதல் பாதிப்புகளில் இருந்து காக்க முடியவில்லை. இதனால் தனித்துவமான அண்டார்டிகாவின் பல்லுயிர்த்தன்மை என்பது பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தாக்கத்தை முழுமையாக தவிர்க்க முடியாது என்றாலும் அதை குறைப்பதற்கான வழிகளை உலக நாடுகள் இணைந்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றனர். தற்போதைய நிலையில் அவசர கால நடவடிக்கையாக அண்டார்டிக் கண்டத்தின் பாதிக்கப்படக்கூடிய பல்லுயிர் பெருக்கத்தில் 84 சதவீதம் வரை பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பு அடுக்கு போட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதற்கு ஆண்டுக்கு 23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டபட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் டைனோசர் என்ற இனம் இருந்தது என்று சொல்வதை போல் பின்னர் வரும் சந்ததிக்கு பென்குயின் என்ற இனம் ஒன்று இருந்தது என்று சொல்லும் நிலை வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டைனோசர் போன்றே பென்குயின்கள் அழியும் அபாயம்
பென்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதாவது டைனோசர் வாழ்ந்த காலத்திலேயே பென்குயின்களும் இருந்திருக்கும் என மற்றுமொரு ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 6.5 கோடி வருடங்களுக்கு முன்பு பென்குயின்கள் ராட்சத வடிவில் நடமாடி வந்துள்ளன. அதன்பின் படிப்படியாக முன்னேறி பென்குயின்கள் நிமிர்ந்து, மெதுவான நடைப் பண்புகளை பெற்றதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நியூஸிலாந்து நாட்டில் வைப்பாரா எனும் நகரத்தில் வாழ்ந்த பென்குயின்கள், சுமார் 150 செமீ உயரத்துடன் வாழ்ந்ததாக புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய உயரமான, 17 பென்குவின் இனங்கள் இயற்கையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவுகளால் அழிந்திருக்கும் என நியூசிலாந்தைச் சேர்ந்த சென்கென்பெர்க் பறவை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது.

அதன்பின் அத்தகைய ராட்சத பென்குயின்கள் முற்றிலும் அழிந்து தற்போது வாழும் சிறிய ரக பென்குயின்கள் தோன்றியிருக்கலாம் எனவும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது. இப்போது வாழும் பென்குயின்கள் வெறும் 43 சென்டிமீட்டர் உயரத்துடனே உள்ளன. தற்போதைய பென்குயின்களின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS