‘விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி’: திருச்சியில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

‘விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி’: திருச்சியில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த கிம்புலா எல குணா உள்ளிட்ட 09 பேரை, எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை புழல் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 9 பேரும்,சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைதுசெய்தது.

சி. குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணாவும் சேர்ந்து போதைப் பொருள் கும்பல் ஒன்றை நடத்திவந்ததாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது. இவர்களுக்கான போதைப் பொருளை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹாஜி சலீம் என்பவர் அனுப்பிவந்துள்ளார்.

இந்த போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கும்பல், இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டதாகவும் இரு நாடுகளிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது.

இது தொடர்பான ஒரு வழக்கை கடந்த ஜூலை 8ஆம் திகதியன்று தாமாக முன்வந்து என்.ஐ.ஏ. பதிவுசெய்தது.

இது தொடர்பாக என்ஐஏவின் டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அணி ஒன்று திருச்சி சிறப்பு முகாமில், கடந்த ஜூலை 20ஆம் திகதி சோதனைகளை நடத்தியது.

இந்த சோதனைகளின்போது, மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதற்குப் பிறகு திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சி. குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்செக, ஸ்டான்லி கென்னடி ஃபெர்ணான்டோ, லாடியா சந்திரசேன, தனுக்க ரோஷன், வெள்ளசுரங்க்க, திலீபன் ஆகிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் முகமது அஸ்மின் மட்டும் ராமநாதபுரம் தேவகோட்டையைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் வேறு சில குற்றங்களுக்காக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். 2021ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவர் கொச்சிக்கு அருகில் உள்ள அங்கமாலியில் கைதுசெய்யப்பட்டார்.

ஹாஜி சலீமுடன் இருந்த தொடர்புக்காக கைதுசெய்யப்பட்ட அவரை விசாரித்ததில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் கொடுக்கல் – வாங்கள் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இந்தியாவைத் தளமாகப் பயன்படுத்தி, இலங்கைக்கு போதைப் பொருட்களையும் ஆயுதங்களையும் கடத்துவதில் முக்கியப் புள்ளியாக சுரேஷ் ராஜன் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகில் படகு ஒன்றை சந்தேகத்தின் பேரில் இடை மறித்த பாதுகாப்புப் படையினர், அதனைச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் படகிலிருந்து 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This