சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட நால்வர் அதிரடி கைது

பண்டாரகம காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவ கோப்ரல் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் வாகன திருத்துனர், தச்சுவேலை செய்பவர் மற்றும் அரசு நிறுவன ஊழியர் ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய கோப்ரல் பாதுக்க இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு 11.30 மணியளவில் கம்புருகுடா சந்திக்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது கம்புருகொட பக்க வீதியொன்றில் தலைக்கவசம் அணியாத மூவரை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளை பண்டாரகம காவல்துறை போக்குவரத்து பிரிவின் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கேட்டபோது சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளில் இருந்த இராணுவ கோப்ரல், “நான் அதிபர் பாதுகாப்புப் பிரிவில் இருக்கிறேன். உங்களை விட சட்டம் தெரியும்.’’என தெரிவித்துவிட்டு மோட்டார் சைக்கிளை சிறிது தூரத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு சென்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
அப்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரின் ஓட்டுனர் உரிமத்தைப் காட்டுமாறு காவல் துறையினர் பலமுறை தெரிவித்த போதிலும், வீட்டின் உரிமையாளர் வந்து, வாயிற்கதவு அருகே இருந்த காவலரைத் தள்ளிவிட்டு, கதவை மூட முயன்றார்.
போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு வந்த காவல்துறை குழுவொன்று சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை தமது காவலில் எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.