கம்பன் கழகம் ஜெயராஜ்க்கு மூத்த பத்திரிகையாளர் எச்சரிக்கை

கம்பன் கழகம் ஜெயராஜ்க்கு மூத்த பத்திரிகையாளர் எச்சரிக்கை

தமிழ்ப் பத்திரிகையாளர்களின் பணிகள் நெருக்கடிகள் பற்றிப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே காழ்ப்புணர்ச்சியுடன் காலைக்கதிர் பத்திரிகையில் கம்பன் கழகம் இ.ஜெயராஜ் எழுதிய குறிப்பு ஒன்றுக்கு கொழும்பில் உள்ள மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விஞ்ஞானம் மற்றும் ஊடகத்துறை விரிவுரையாளருமான அ.நிக்ஸன் பகிரங்கக் கடிதம் ஒன்றைத் தனது முகநூலில் எழுதியுள்ளார்.

அதன் முழுமையான விபரம் வருமாறு,

கம்பன் கழகம் ஜெயராஜ் அவர்களுக்கு ..!

17-12-2022 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையில் தங்கள் குறிப்பொன்றை வாசித்தேன். சில பத்திரிகை ஆசிரியர்கள் பற்றியும் பத்திரிகை நிறுவன முதலாளிகள் பற்றியும் தாங்கள் குறிப்பிட்ட கருத்துத் தங்கள் அறிவைத் தரம் தாழ்த்தியுள்ளது.

பிரதான ஊடகங்களின் (Mainstream Media) பிரதம ஆசிரியர்களுக்கென்று ஒழுக்க விதிகள் – கட்டுப்பாடுகள் உண்டு. கருத்துச் சுதந்திரம் என்பதற்காக வன்மத்துடன் ஒருவரைத் தாக்கி எழுதவும், பரிகாசம் செய்யவும் முடியாது.

இது பொது விதி. கருத்துச் சுதந்திரம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி அரசின் தோற்றம் பற்றிய சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் தந்தையர்களில் ஒருவரான அறிஞர் ரூசோ தெளிவாக விபரிக்கிறார்.

கருத்துச் சுதந்திரம் என்பதை மையமாகக் கொண்டே எழுத்துச் சுதந்திரம், எத்தகையை நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்கு பழந் தமிழ் இலக்கியங்களே சான்று. நகைச் சுவையோடு, ஆனால் ஒருவரின் மனம் நோகாமல் கதை சொல்லி இலக்கியத்தின் வழி நின்று ஒருவர் விடும் தவறை உணரவைத்திருக்கிறார்கள்.

இலக்கிய – ஆன்மீகப் பேச்சாளரான தங்களுக்கு இது தெரியாததல்ல. ஜனரஞ்சகம் என்ற போர்வையில் குப்பை மொழி நடைகளை தமிழகப் பேச்சாளரான சாலமன் பாப்பையா இறக்குமதி செய்கிறாரெனப் பலரும் அன்று பேசியதைக் கேட்டிருக்கிறேன். அவ்வாறு பேசியவரைத் தங்கள் கம்பன் கழக மேடைகளில் பேச வைத்தும் தாங்களே. அவரைத் தங்கள் மேடைக்கு அழைத்து வந்தது மாத்திரமல்ல, அவரைவிடவும் நாகரிகமற்ற பரிகாசப் பேச்சுக்களைப் பேசத் தாங்களும் ஆரம்பித்துவிட்டீர்கள்.

ஆகவே கம்பன் புகழ்பாடும் விவாத மேடைகளில் வேண்டுமானால் ஒருவரைப் பரிகாசம் செய்தோ வசைமொழிகாளாலோ தாங்கள் பேசலாம். அதனை நகைச்சுவைப் பேச்சு என்றும் தாங்கள் விளக்கம் கொடுக்கலாம்.

சலமன் பாப்பையா கொழும்புக் கம்பன் கழக விழா மேடையில் தங்களைப் பார்த்து நகைச்சுவை என்ற போர்வையில் பேசிய நாகரிகமற்ற வசைமொழிகள் எத்தனை? தங்கள் பற்றிய அங்கதப் பேச்சுக்களைச் செய்தியாளர் ஒருவர் செய்தியாக்கியிருந்தால், தாங்கள் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்?

ஆகவே பிரதான ஊடகங்களுக்கென்று ஒழுக்கம் – பொறுப்பு உண்டு. தாங்கள் மேடையில் பரிகாசம் செய்வது போன்று பத்திரிகைகளில் துறைசார்ந்த ஒருவரைப் பரிகாசம் செய்யவோ வசைமொழிபாடவோ முடியாது.

இதன் காரணமாகவே தாங்கள் குறிப்பிட்ட நான்கு பத்திரிகை ஆசிரியர்களும் தங்கள் பத்தி எழுத்தை இடையில் நிறுத்தியிருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனம். இது தங்கள் அறிவுக்கு எட்டவில்லையா? தாங்கள் குறிப்பிட்ட நான்கு பத்திரிகை ஆசிரியர்களும் வெவ்வேறுபட்ட காலத்திலேதான் தங்கள் பத்தி எழுத்தை இடைநிறுத்தியிருக்கிறார்கள் என்பதைக்கூட தாங்கள் புரிந்துகொள்ளவில்லையா?

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் தங்கள் பத்தி எழுத்தை இடை நிறுத்தியது 1989 ஆம் ஆண்டு. கொழும்பில் இருந்து வெளிவந்த தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தங்கள் பத்தி எழுத்தை இடைநிறுத்தியது 1998 ஆம் ஆண்டு. வீரகேசரியில் முன்னர் பதவி வகித்த பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகன் தற்போது பதவி வகிக்கும் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் ஆகிய இருவரும் தங்கள் பத்தி எழுத்தை இடை நிறுத்தியமை ஆறு வருட இடைவெளிக்குள் தான்.

ஆகவே நான்கு ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் கூடிப் பேசித் திட்டமிட்டு ஜெயராஜின் பத்தி எழுத்தை நிறுத்தவில்லை என்பது இங்கே கண்கூடு. முரசொலி பிரதம ஆசிரியர் தங்கள் பத்தி எழுத்தை இடைநிறுத்தியபோது, வீரகேசரியில் தற்போது ஆசிரியராகப் பதவி வகிப்பவருக்குப் பன்னிரண்டு வயது.

தினக்குரலில் பிரதம ஆசிரியராகப் பதவி வகித்தவருக்கு வயது முப்பத்து ஒன்று. அப்போது அவர் கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த வீரகேசரியில் சாதாரண உதவி ஆரியர் மாத்திரமே. அன்று முரசொலியில் பிரதம ஆசிரியராக இருந்தவருடன் இவருக்கு நட்பபுக்கூட இருக்கவில்லை.

ஆகவே வெவ்வேறுபட்ட காலங்களில் தங்கள் பத்தி எழுத்துக்கள் குறித்த நான்கு பிரதம ஆசிரியர்களிளாலும் இடை நிறுத்தப்பட்டிருக்கின்றது என்றால் யார் பக்கம் தவறு? தினக்குரலில் தாங்கள் எழுதிய பத்தி எழுத்துக்கு அமரா் பேராசிரியர் கா.சிவத்தம்பி பதில் எழுதியிருந்தார்.

அந்தப் பதில் விமர்சனம் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதாலேயே தாங்கள். தங்களுடைய பத்தி எழுத்தை நிறுத்தியிருந்தீர்கள் அல்லவா? ஆசிரியர் தங்கள் பத்தி எழுத்தை நிறுத்தவில்லையே! துறைசார்ந்த ஒருவரைப் பற்றி பிரபலமான ஒருவர் பத்திரிகையில் எழுதினால், அதற்கு மறுபதில் எழுத அனுமதிக்க வேண்டும் என்ற ஊடக விதி தங்களுக்குத் தெரியாதா?

பத்திரிகை தர்மம் தெரியாமல், மூத்த பத்திரிகை ஆசியர் ஒருவரைப் பற்றிப் பிரதான ஊடகம் ஒன்றில் பகிரங்கமாக எழுதிய தங்கள் சிறுமையை தமிழ் உலகம் எப்படிப் பார்க்கும்? 1987 இல் முரசொலியிலும், 1998 இல் தினக்குரலிலும் தங்கள் பத்தி எழுத்து இடை நிறுத்தப்பட்டமைக்கான காரண காரியத்தைத் தாங்கள் கொஞ்சம் சுயபரிசோதனை செய்திருந்தால், வீரகேசரியில் தங்கள் பத்தி எழுத்தைக் குறித்த இரண்டு பிரதம ஆசிரியர்களும் இடை நிறுத்தியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதல்லவா? ஓன்றைப் புரிந்துகொள்ளுங்கள்– பத்திரிகை ஆசிரியர்களுக்கென்று ஒழுக்க விதிகள் மாத்திரமல்ல சமூகப் பொறுப்பும் உண்டு.

தற்போது தமிழ்ப் பத்திரிகைகள் எல்லாம் சமூகப் பொறுப்புடன்தான் செயற்படுகிறதா என்று தாங்கள் திருப்பிக் கேட்கலாம். சமூகப் பொறுப்பு உண்டு. எப்படி? அரசியல் – பொருளாதார செய்திகள் கட்டுரைகளைத் தவிர்த்துத் தங்கள் பத்தி எழுத்துக்கள் போன்ற சமூகச் செய்திகள் சமூகக் கட்டுரைகள் தொடர்பாகப் பிரதம ஆசிரியர்கள் பொறுப்புடன்தான் செயற்படுகின்றனர். அவ்வப்போது ஏற்படுகின்ற தவறுகளுக்குப் பிரதம ஆசிரியர் என்ற முறையில் மன்னிப்புக் கோருதல்.

விளக்கமளித்தல் மறுப்புச் செய்திகளைப் பிரசுரித்தல் என்ற ஊடக ஒழுக்க விதிகளை அவர்கள் பேணுகின்றனர். ஆனால் தற்போதைய ஈழத்தமிழ் அரசியல் சூழல், பொருளாதார நெருக்கடி பற்றிய விடயங்களில் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள் கட்டுரைகளில் போதாமை உண்டு. தகவல் பிரச்சினைகளும் உண்டு. ஆனால் அந்தக் குற்றச்சாட்டைத் தனியே பத்திரிகை ஆசிரியர்களின் தலையில் மாத்திரம் எவரும் சுமத்திவிடவும் முடியாது. அதற்கான காரணங்கள் விரிவானவை.

நிறுவனத்தின் கொள்கை, விளம்பரங்கள், லாப நட்டங்கள் போன்ற பல விடயங்களிலும் அவை தங்கியிருக்கின்றன. விருப்பு வெறுப்புகளும் சம்பள முரண்பாடுகளும் ஆளணிப் பற்றாக்குறைகளும் உண்டு.

அத்துடன் ஈழத்தமிழர் அரசியல் கோட்பாடுகளை எந்தக் கோணத்தில் வைத்து எழுதுவது என்பதிலும் சில தமிழ் பத்திரிகைகளுக்குச் சிக்கல் உண்டு. சிலருக்குப் அரசியல் விளக்கப் பற்றாக்குறைகளும் இல்லாமலில்லை. ஆனாலும் இவற்றையெல்லாம் சுதாகரித்துக் கொண்டுதான் திறமையுள்ள பத்திரிகை ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பைச் சுமக்கிறார்கள்.

சகிப்புத்தன்மையோடுதான் திறமையுள்ள செய்தியாளர்கள் பலரும் தங்கள் பணியில் ஈடுபடுகின்றனர். பல நெருக்கடிகள், அவமானங்கள், குடும்பப் பொருளாதாரச் சூழல் என்று சொல்ல முடியாத வலிகளோடுதான் முழு நேரப் பத்திரிகையாளன் ஒருவர் பணியாற்றுகிறான்.

ஜெயராஜ் போன்ற பிரபலமுள்ளவர்கள் வெளியில் இருந்து கொண்டு பத்திரிகை ஒன்றுக்கு எழுதினால், அந்தப் பத்தி எழுத்துக்கான கொடுப்பனவு முறைமை எந்த ஒரு ஊடக நிறுவனத்திலும் இல்லை.

எழுத இடமளிப்பதைக் கௌரவமாகவே அவர்கள் கருத வேண்டும். ஆனால் பத்திரிகையில் தொடர் ஒன்றை எழுதுங்கள் என்று கூறிய கௌரவத்தையும் சுதந்திரத்தையும் தனிப்பட்ட வன்மங்களுக்குப் பயன்படுத்தினால், எழுத்தை நிறுத்துவதைத் தவிர பத்திரிகை ஆசிரியரால் வேறெதுவுமே செய்ய முடியாது.

அரசியல் – பொருளாதார விவகாரங்களில் மேற்குலக ஊடக நிறுவனங்களில் கூட பத்திரிகை நிறுவனத்தின் சில கட்டுப்பாடுகள், விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே பத்திரிகை ஆசிரியர்கள் செயற்படுகின்றனர். அதுவும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெளிநாட்டுத் தூதுவர்கள் – அரசியல் பிரமுகர்கள் போன்றோர் நிறுவனத்துடன் ஏற்படுத்தும் உறவுகள் – தொடர்புகள் என்று பல்வேறுபட்ட தன்மைகளைப் புரிந்துகொண்டுதான் பணியாற்ற வேண்டிய சூழலும் உண்டு. சுயமரியாதையுடன் ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியர்களும் செயற்பட வேண்டும் என்பது உண்மைதான்.

அதற்காக பிரபல்யம் என்று சொல்லிக் கொள்ளும் ஜெயராஜ் போன்றவர்களின் பத்தி எழுத்துக்களைப் பத்திரிகை ஆசிரியர்கள் கண்ணை மூடிக் கொண்டு அனுமதிக்க வேண்டும் என்பது மறுதலையானது.

தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் அண்ணன் வித்தியாதரன் 2012 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைத்து என்னிடம் நேரடியாகச் சொன்ன ஒரு விடயம்– ‘நிக்ஸன் நீங்கள் எல்லாம் ஒரு முதலாளியின் நிர்வாகத்தில் பணியாற்றிய செய்தியாளர்கள்.

ஆனால் நான் எனது மச்சானின் (ஈ.சரவணபவன்) நிறுவனத்தில் செய்தியாளராக இருந்து இரண்டு பத்திரிகைகளுக்குப் பிரதம ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றவன்.

ஆகவே உங்களை எல்லாம் என்னோடு ஒப்பிட்டுப் பேச முடியாது. அதாவது நீங்கள் செய்தியாளனாகப் பணியாற்றியபோது எதிர்நோக்கிய வலிகளை நான் எதிர்கொள்ளவில்லை’ என்றார்.

ஆகவே ஜெயராஜ் அவர்களே, வித்தியாதரன் தனது காலைக்கதிர் பத்திரிகையில் தங்களை எழுத அனுமதித்த சுதந்திரத்தைத் தாங்கள் வேறு பத்திரிகைகளில் எதிர்பார்க்க வேண்டாம்.

அத்துடன் சிங்கள ஆட்சியாளர்களைக் கொழும்புக் கம்பன் கழக மேடைகளுக்கு அழைத்து, புகழ்பாடிப் பொன்னாடை போர்த்தி முடி சூட்டிக் குடை பிடித்து அழகுபார்த்த தாங்கள், தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் பற்றிப் பேசத் தகுதியற்றவர் என்பதை நினைவில் கொள்க.

தமிழ் மக்கள் போரில் மடிந்து இரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்தபோதும், எந்தவித உணர்வுகளுமின்றி கொழும்பில் கம்பன் விழா நடத்தியவர்தான் இந்த ஜெயராஜ். ஈழத்துச் சைவ சமயப் பாரம்பரியங்களை மறந்து தென்னிந்திய வழிபாட்டுக்கும் சமஸ்கிருத மொழிக்கும் முக்கியத்துவம் வழங்கும் தங்களைப் பற்றிய மேலதிக விபரங்களை நான் எழுத வேண்டிய அவசியமேயில்லை.

ஏனெனில் ஈழத்தமிழர்களுக்கு ஜெயராஜ் என்ற மனிதரின் முழு அடையாளமும் தெரியும். விரைவில் தங்கள் வேஷம் முழுமையாகக் கலையும். தங்களை ஈழத்தமிழ் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

ஆனால் வரலாற்றின் நீட்சியாகத் தங்களுக்குக் காலம் பதில் சொல்லும். குறிப்பு– பிரதான தமிழ் பத்திரிகைகள் சிலவற்றின் மீது என்னைப் போன்ற சில பத்திரிகையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் – விமர்சனங்கள் என்பது வேறு. அவை தொழில்சார்ந்த முன்னேற்றமான கருத்துக்கள். ஆனால் ஜெயராஜ் குறிப்பிடும் பரிகாசங்கள் ஒட்டுமொத்த தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஈழத்தமிழ்ச் சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாகவே அமைகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS