யாழில் மீட்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

யாழில் மீட்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

யாழ் கடற்பகுதியில் படகொன்றில் தத்தளித்த மியான்மர் பிரஜைகள் 104 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு கடற்படையினரால் உணவு வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதில் ஒரு சிறுவனுக்கு கையில் காயம் காரணமாகவும் மற்றுமொருவர் உணவு உண்ணாமையால் சுகாவீனமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனுடன் அவனது தாயும் வைத்தியசாலையில் உள்ளார். வெற்றிலைகேணிக்கு வடக்கே சுமார் 3.5 கடல் மைல் தொலைவில் உள்ள இலங்கைக் கடற்பரப்பில் பயணிகள் கப்பலில் இருந்த 104 மியான்மர் பிரஜைகளை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர்.

மியான்மரில் இருந்து இந்தோனேசியாவிற்கு செல்லும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றிரவு இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையின் உதாரா மற்றும் 04 வது விரைவுத் தாக்குதல் கப்பல்கள் மூலம் இந்த வெளிநாட்டவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

CATEGORIES
Share This