காணாமல் ஆக்கப்பட்டோரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

காணாமல் ஆக்கப்பட்டோரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் முதலாவது தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதில் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பில் அடுத்த தவணையில் காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு அல்லது அவர் காணாமல் போனமை தொடர்பான காரணங்களை விளக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இன்னுமொரு வழக்கில் மனுதாரர் போதுமான ஆவணங்களை நீதிமன்றின் முன்னால் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மூன்று வழக்குகளும் அடுத்த வருடம் ஜனவரி 27ஆம் திகதி நீதிமன்றத்தினால் வரவழைக்கப்பட்டு அதன் தீர்ப்பு வழங்கப்படும் என மேலும் தெரிவித்தார்

CATEGORIES
Share This