லண்டன் நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரிய கோட்டாபயவின் பிரித்தானிய பிரதிநிதி

மனித உரிமை செயற்பாட்டாளரும், தென் ஆபிரிக்க சட்டதரணியும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான யஷ்மின் சூகாவிடம் பிரித்தானியாவில் வாழும் சிங்கள சட்டத்தரணி ஒருவரை பகிரங்கமாக மன்னிப்பு கோருமாறு பிரித்தானிய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
யஷ்மின் சூகா விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதன் காரணமாக பிரித்தானியாவில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமான சட்டத்தரணியான ஜெயராஜ் பலியவடனவை பகிரங்கமாக மன்னிப்பு கோருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜெயராஜ் பலியவடன, யஷ்மின் சூகாவுக்கு இழப்பீட்டு தொகையை செலுத்தவும் இணங்கியுள்ளதுடன் நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.
ஜெயராஜ் பலியவடன, மக்கள் எதிர்ப்பு காரணமாக பதவியை கைவிட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரித்தானிய பிரதிநிதியாக செயற்பட்டு வந்தவர்.
தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சாதகமான வகையில் பக்கசார்பாக செயற்படுவதாக இந்த சட்டத்தரணி, யஷ்மின் சூகாவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருந்துடன் அந்த குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு அறிக்கை ஒன்றையும் அனுப்பி இருந்தார்.
இந்த அறிக்கையில் உள்ள பொய்யான விடயங்கள் காரணமாக தனக்கு ஏற்பட்ட அவப்பெயர், பொய்யான தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டமையை சவாலுக்கு உட்படுத்தி யஷ்மின் சூகா பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றதுடன் வழக்கில் தோல்வியடைந்த சட்டத்தரணி ஜெயராஜ் பலியவடன, நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். மனுதாரருக்கு எதிராக சுமத்திய பொய் குற்றச்சாட்டை எந்த நிபந்தனையும் இன்றி திரும்ப பெறுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும் மன்னிப்பு கோரியதன் நேர்மையை உறுதிப்படுத்த மனுதாரருக்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் அழுத்தங்களுக்காக அவருக்கு பெருந்தொகையை இழப்பீடாகவும் செலுத்துவதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.
மேலும் மனுதாரரின் வழக்கு செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் பலியவடன, லண்டன் உயர் நீதிமன்ற நீதியரசர் சேர் மார்டின் டேனியல் செம்பர்லேன் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி ஜெயராஜ் பலியவடன், யஷ்மின் சூகாவிடம் மன்னிப்பு கோரியதை அவர் இணையத்தளத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை தனக்கு இழப்பீடாக கிடைக்கும் தொகையை பயன்படுத்தி இலங்கையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதியம் ஒன்றை ஏற்படுத்த யஷ்மின் சூகா தயாராகி வருவதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளார்.