இந்தியா தலைமைதாங்க மேற்குலக நாடுகள் கண்காணிக்கவேண்டும் – ரணிலின் தீர்வு பேச்சுக்கு முன் அழுத்தம்

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை முறையாக தொடரவேண்டுமானால், பேச்சுவார்த்தைக்கு இந்தியா தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் மேற்பார்வை அவசியம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்த தெரிவித்த அவர், “5 தமிழ் கட்சிகள் சம்பந்தர் தலைமையில் கூடி சில தீர்மானங்களை அதிபருக்கு அனுப்பியிருந்தோம். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம்.
நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு ஏற்கனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீள ஒப்படைக்கப்படவேண்டும் எனவும், அதிகார பகிர்வு சம்பந்தமாக அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையையும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும், இந்த ஒழுங்கு முறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதையும் நாம் வரவேற்கின்றோம் என்ற கோரிக்கைகள் அடங்கிய செய்தியை அதிபரிடம் நாம் தெரிவித்திருந்தோம்.
இந்த அடிப்படையிலேயே நாம் பேசலாம் என்று இருக்கும் அதேநேரம், இந்தக் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும் எனவும் கூறியிருக்கின்றோம்.
அதைவிட சட்டத்தில் உள்ள மாகாணசபை முறைமை அதிகாரங்களோடு பகிரப்படும்போது தான் எங்களுக்கு தற்போது உள்ள பிரச்சினைகளை நிறுத்த முடியும் என்ற அடிப்படையில், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் உள்ள சகல அதிகாரங்களோடும் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.
இனப்பிரச்சினை தொடர்பாக மகிந்த கலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது.
நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரப்பட்டாலும் முன்னாள் அதிபர் மைத்திரிக்கும் அப்போதைய பிரதமர் ரணிலுக்கும் பிரச்சினை வந்ததால் தட்டிக்கழிக்கும் முனைப்பு இருந்தது.
தற்போதும் இந்தப் பேச்சுவார்த்தை ஐ. நா சபையின் தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம் அல்லது பொருளாதார பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இதனைக் காரணம் காட்ட இந்தப் பேச்சு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.
இருந்தாலும் பேச்சுக்கு சென்று எமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம்.
இல்லாவிட்டால் நாம் அவர்கள் கேட்பதைக் கொடுக்க இருந்தோம் அவர்கள் பேச்சுக்கு வராததால் எம்மால் எதனையும் செய்ய முடியவில்லை என நல்ல பெயரை எடுக்கும் சந்தர்ப்பமும் அரசாங்கத்திற்கு உள்ளது.
இதுவரை காலம் அரசாங்கங்களோடு இனப்பிரச்சினை விடயத்தை பேசி வந்து நாம் ஏமாற்றப்பட்டவர்கள். இந்தப் பேச்சுவார்த்தை தொடருமாக இருந்தால் இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை இருக்க வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும்.
இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த விட முடியாது” – என்றார்.