சீனாவிற்கு தான் ஆதரவு! சாணக்கியனின் கருத்து தவறானது: கொழும்பில் வெடித்தது போராட்டம்

சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் சீனா’ என்று சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சக்களின் நண்பன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைக்கு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்புத் துறைமுக நகரத்தையும் தனதாக்கியுள்ளது.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எந்த அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சீனாவின் முதலீடுகளில் இலங்கைக்கு எவ்வித நலனும் கிடைக்கப் பெறவில்லை.
சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிடுகின்றார்கள். அவ்வாறாயின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவாகச் செயற்பட வேண்டும்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் போது சீனா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது. இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சீனா இலங்கைக்குச் சார்பாகச் செயற்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்கள்.
இதனைப் பைத்தியக்காரத்தனமான பேச்சு என்று குறிப்பிட வேண்டும். சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. மதச் சுதந்திரம் இல்லை.
இவ்வாறான சூழலையா இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள்? சீனா இலங்கையின் உண்மையான நட்பு நாடு இல்லை. மஹிந்த ராஜபக்சவினதும், அவரது குடும்பத்தினரதுதும் நண்பராகவே சீனா உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.