மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முழு அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – டக்ளஸ்

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முழு அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – டக்ளஸ்

கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும், ஜனாதிபதி தமக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை- – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லையென்றும் சபையில் தெரிவித்த அமைச்சர், அந்த நடவடிக்கைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது ஜேவிபி எம்பி விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில், அத்துமீறி நாட்டுக்குள் பிரவேசிக்கும் இந்திய மீன்பிடி படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமென்று மன்னாரில் வைத்து தெரிவித்தார். அது, இப்போது செயற்படுத்தப்படுமா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி முழு அதிகாரத்தையும் தமக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ”கைது செய்யப்பட்டு நீதிமன்ற தீப்பின்படி அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளை, தேர்ந்தெடுக்கப்படும் எமது கடற்றொழிலார்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படகுகளின் தொழில் முறைமைகளை மாற்றி சட்டரீதியிலான தொழில் முறைமைக்கென வழங்கும் திட்டமும் உள்ளது.இதன் பயனாக இராட்சத இந்திய இழுவை மடி வலைப்படகுகளுக்கு முகங்கொடுத்து எமது கடற்றொழிலாளர்களாலும் பயமின்றி கடற்றொழிலில் ஈடுபடக்கூடிய சூழலை உருவாக்குவதே நோக்கம்.

முள்ளை முள்ளால் எடுப்பதைப்போன்ற ஒரு செயற்பாடுதான் இது இந்திய இழுவை மடி வலைப்படகுகளின் எல்லை தாண்டியதும் சட்டவிரோமானதுமான செயற்பாடுகள் காரணமாக எமது கடல் வளம் பாரியளவில் அழிக்கப்படுவகிறது.மேலும், எமது கடற்றொழிலாளர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.இதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது.

ஏற்கனவே, கைது செய்யப்பட்டு பழுதடைந்த இந்திய இழுவை மடி வலைப் படகுகளை பல்வேறு அழுத்தங்கள் எதிர்ப்புகள் மத்தியிலும் நாம் ஏலம் விட்டிருந்தோம்.

அந்நிதியை, மேற்படி இந்திய இழுவை மடி வலைப் படகுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு தீர்மாளித்துள்ளோம்.

அத்துடன் அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளைத் திருத்தியமைத்து பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This