ஜனாதிபதி பதவிக்கான பெயர் பட்டியலை தூக்கியெறிந்த மைத்திரி: அம்பலப்படுத்திய அமைச்சர்

ஜனாதிபதி பதவிக்கான பெயர் பட்டியலை தூக்கியெறிந்த மைத்திரி: அம்பலப்படுத்திய அமைச்சர்

நிமல் சிறிபால டி சில்வா அல்லது விஜேதாச ராஜபக்ச ஆகியோரில் ஒருவருக்கு ஜனாதிபதிப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரேரித்திருந்த விடயம் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த மே மாதம் இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் போது சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தப் பிரேரணையை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்திருந்ததாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், வகயாகுளத்தில் நேற்றைய தினம் ஸ்மார்ட் விவசாயப் பயிற்சிக் கல்லூரியைத் திறந்து வைத்து உரையாற்றும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணையை மைத்திரி ஏற்காமல் அதனைக் குப்பைக் கூடைக்குள் வீசிவிட்டமை பின்னர் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக அராஜக நிலைமைக்கு நாடு உள்ளாகியிருந்த போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நாட்டைப் பொறுப்பேற்று அதனை வழிநடத்திச் செல்லும் தைரியம் இருக்கவில்லை என்றும் அந்த வகையில் ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக நாட்டைப் பொறுப்பேற்று அதனை வழிநடத்தி வருகின்றமை பாராட்டத்தக்க விடயம் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS