தமிழர்கள் விடயத்தில் இரட்டை வேடம் போடும் ரணில்: தமிழ் கட்சிகள் அதிருப்தி

தமிழர்கள் விடயத்தில் இரட்டை வேடம் போடும் ரணில்: தமிழ் கட்சிகள் அதிருப்தி

தமிழ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் தமிழ் கட்சிகளுடன் பேசுவதற்கு தயார் என வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து தமக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அழைப்பும் வரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலுக்கான திகதியை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில், தங்களுக்குள் கலந்துரையாடி அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், உத்தியோகபூர்வமாக எவ்வித அழைப்பும் இதுவரை விடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தெரிவிக்கும் நிலையில், மறுப்புறம் “இலங்கையின் தேசிய பிரச்சினைக்குப் பேச்சு மூலம் தீர்வு காண நாம் தயாராகவுள்ளோம். அதற்கான முதற்கட்டடமாக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் விரைவில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளோம்.

இதில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால மனக்கசப்பான விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இருப்பதால் காலம்தான் வீண்விரயமாகும். தேசியப் பிரச்சினையை – உள்ளகப் பிரச்சினையை நாம் அனைவரும் ஒன்றுகூடி பேசித் தீர்வைக்காண வேண்டும்.

இந்த நிலையில், வெளியகத் தலையீடுகள் எதற்கு? தீர்வில் நாம் நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS