நாட்டைவிட்டு தப்பியோடும் இலங்கையர்கள் – ரணில் நம்பிக்கை தரும் செய்தி

உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் என வலியுறுத்திய அதிபர், தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது நாட்டில் தமக்கான உலகத்தை உருவாக்குவது இளைஞர்களின் பொறுப்பாகும் என்றும் அதுவே உண்மையான திறமை என்றும் அதிபர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டளவில் வளமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு இளைஞர்கள் பங்களிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தொடர்பில் கடந்த 3ஆம் திகதி இளைஞர்களுடன் நடந்த இணையத்தள உரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அன்று ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது, ஆனால் இன்று நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், தற்போதுள்ள அரசியல் அமைப்பில் அவர்கள் மகிழ்ச்சியடையாததே இதற்குக் காரணம் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நாட்டிற்கு பொருத்தமான பொருளாதார அமைப்பை விரைவாக அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அதிபர், கடந்த ஓகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கொண்டு வர முடிந்தது என்றும் கூறினார்.
அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பயணம் இவ்வருட வரவு செலவுத் திட்டத்துடன் ஆரம்பிக்கும் என குறிப்பிட்டார்.
பொதுச்செலவு முகாமைத்துவம் தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, புதிய நிதி கண்காணிப்பு குழுக்களை நியமிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள குழுக்களை பலப்படுத்துவதற்கும் இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாடாளுமன்ற வரவு – செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி ஒரேயடியாக ஏற்படவில்லை எனவும், நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்ற போதிலும் அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி குறித்த அறிக்கையை எவரும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.