ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தன் மீது தொடர்ச்சியான விசாரணைகள், காண்காணிப்புகள் என காவல்துறையினர், புலனாய்வு துறை அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் ஊடாகவும் அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கி உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் செயலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான செல்வக்குமார் நிலாந்தனுக்கு ஏறாவூர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இன்று (04/12/2022) பிற்பகல் 5 மணியளவில் செங்கலடியில் உள்ள ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டிற்கு வருகை தந்த காவல்துறையினர் நீதிமன்ற அழைப்பாணை வழங்கி உள்ளனர். ஊடகவியலாளர் வெளிநாட்டில் உள்ளதாக கூறிய போது ஊடகவியலாளரின் மனைவியை கட்டாயம் நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

2019 ம் ஆண்டு முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் பிரசுரித்தமைக்காக குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய இருவருடன் இணைத்து ஆர்ப்பாட்ட செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர் நிலாந்தன் மீது ஏறாவூர் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

பிரதேச செயலாளரின் ஊழல் மோசடிகள் தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுவந்த ஊடகவியலாளர் நிலாந்தனை பழிவாங்கும் நோக்குடன் ஆர்ப்பாட்டகாரர்களுடன் இணைத்து ஊடகவியலாளர் மீது மிகவும் திட்டமிட்டு ஏறாவூர் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

ஊடகங்களில், இணையத்தளங்களில் செய்தி வெளியிட்டதே வழக்கு தாக்கல் செய்ய காரணம் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுகிறது. இருப்பினும் குறித்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத ஏறாவூர் காவல்துறையினர் கடந்த மூன்று வருடங்களாக அறிக்கையில் வைத்துக்கொண்டே நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றனர்.

குறித்த வழக்கை ஊடகவியலாளர் நிலாந்தனின் ஊடக செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், ஊடக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த வழக்கை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஏறாவூர் காவல்துறை உயர் அதிகாரியும், பிரதேச செயலாளரும் இணைந்து பழிவாங்கும் நோக்குடன் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்கள் பாலியல் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு மற்றும் இலஞ்ச ஊழல்கள் குறத்தி குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரை புதிதாக பதவி ஏற்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் மீண்டும் அரச பதவியில் அமர்த்தியதன் பின்னர் தற்போது குறித்த வழக்கு புதுப்பிக்கப்பட்டு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மீதான குறித்த வழக்கு தொடர்பாக கடந்த 2019.12.17 அன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களின் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This