மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும்! ரணிலுக்கு எச்சரிக்கை

மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும்! ரணிலுக்கு எச்சரிக்கை

இலங்கையில் உக்கிரமடைந்து செல்லும் பொருளாதார நிலைமை காரணமாக மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு அஞ்சப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மக்கள் இனிப் போராட்டம் நடத்தினால் இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் மீண்டும் கூறி வருகின்றமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மோசமடைந்து கொண்டே செல்லும் நாட்டின் நிலைமை
மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும்! ரணிலுக்கு எச்சரிக்கை | Massive Protest Again In Sri Lanka

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இப்போது நன்றாகக் குழம்பிப் போய் இருக்கின்றார். நாட்டின் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து கொண்டு செல்கின்றதே தவிர முன்னேற்றமடையவில்லை.

இதனால் மீண்டும் மக்கள் வீதிக்கு வருவார்கள். இதை உணர்ந்ததால்தான் ஜனாதிபதி இந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்களை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

மக்கள் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை. அவர்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராவதற்கு முன் நாடாளுமன்றில் ஆற்றிய உரைகளைக் கொஞ்சம் எடுத்துப் பாருங்கள்.

மக்கள் போராட்டத்துக்கு நூறு வீத ஆதரவு தெரிவித்துப் பேசி இருந்தார். நூறு வீத ஜனநாயகவாதியாகத் தன்னைக் காட்டி இருந்தார். போராட்டக்காரர்களின் குரலுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களின் போராட்டம் சரியானது என்றெல்லாம் ஜனாதிபதி கூறி இருந்தார்.

இன்று ஜனாதிபதியானதும் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். அவர் செயற்படுவது நாட்டு மக்களுக்காக அல்ல. ‘மொட்டு’க் கட்சியினருக்காக – ராஜபக்ச குடும்பத்துக்காக. அதனால் அந்தக் குடும்பத்தைப் பாதுகாக்கும் விதமாக அவர் செயற்படுகின்றார்.

தங்களைப் பாதுகாக்கக்கூடிய சிறந்த பாதுகாவலன் ரணில்தான் என்று ராஜபக்ச குடும்பத்துக்குத் தெரியும். அதனால் தான் அவரைக் கூட்டி வந்து ஜனாதிபதியாக்கி இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This