இலங்கையில் இலத்திரனியல் படகுகளை அறிமுகப்படுத்த திட்டம்

இலங்கையில் இலத்திரனியல் படகுகளை அறிமுகப்படுத்த திட்டம்

இலங்கையில் கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2023 ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறிய அளவில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் மின்கலத்தை பயன்படுத்தி 100 கிலோமீற்றர் வரை பயணிக்கக் கூடிய மின்சார மோட்டார் படகை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 86 ரூபா மாத்திரமே இதற்காக செலவு ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் மற்றும் டீசலைப் பயன்படுத்தும் படகுகளில் சூரியப்படலங்கள் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் அனுமதிப்பத்திரம் இல்லாத எவருக்கும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படாது எனவும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அடுத்த வருடம் தெரிவு செய்யப்பட்ட 2500 நன்னீர் தேக்கங்களில் மீன் குஞ்சுகளை விடுவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

CATEGORIES
Share This