ஊடகவியலாளர் நிலாந்தனை தேடிச் சென்ற காவல்துறையினர்

மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தனை தேடிச் சென்ற காவல்துறையினர் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடாத்தி தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை இன்று 27.12.2022 மதியம் 12.40 மணியளவில் அவரது வீட்டிற்கு தேடிச் சென்ற காவல்துறையினர் அவர் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடாத்தி தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனர்.
ஊடகவியலாளர் நிலாந்தனை இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முயற்சி செய்து வந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில் அவருக்கு எதிராக மீண்டும் மீண்டும் விசாரணைகளை நடாத்தி வரும் இலங்கை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் ஊடகவியலாளர் நிலாந்தனை கடந்த மாதம் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
அத்துடன் அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்லும் காவல்துறையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஊடகவியலாளரின் குடும்பத்தினரை அச்சுறுத்தி “அவர் எங்கு இருக்கிறார்? எந்த நாட்டில் இருக்கிறார்? அவருக்கு விசாரணை உள்ளது அவரை நாட்டிற்கு வரச் சொல்லுங்கள்? இல்லாவிட்டால் நீங்கள் விசாரணைக்கு வர வேண்டும் என கூறி அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
இன்று ஊடகவியலாளரின் வீட்டு வளாகத்திற்குள் வந்த இரண்டு காவல்துறையினர் இதேபோல் ஊடகவியலாளர் எங்கே உள்ளார்? எந்த நாட்டிற்கு சென்றுள்ளார்? எப்போது வருவார் என்ற கேள்விகளை கேட்டதோடு தொலைபேசி இலக்கம். What’s app இலக்கங்கள் உள்ளிட்ட பல தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனர்.
ஒரு ஊடகவியலாளரின் வீட்டிற்குச் சென்று அவரை பயங்கரவாதி போன்று சித்தரித்து தொடர்ச்சியாக குடும்பத்தினரை விசாரணை நடத்தி வருவதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளதோடு. தான் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளதாக ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.