இரண்டு பெரிய அரசியல் கூட்டணிகள்-திரைமறைவில் நடக்கும் பேச்சுவார்த்தை

சில பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து பெரிய அரசியல் கூட்டணியை தேர்தலில் களமிறக்குவதற்காக திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய தரப்புகள் இணைந்து கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் அணி என்பன இணைநத்து வேறு ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
இவ்வாறு உருவாக்கப்பட உள்ள கூட்டணிகள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன. இது இந்த கூட்டணிகளின் முதல் சோதனை முயற்சியாக இருக்கலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
கட்சியின் கொள்கை மற்றும் மத்திய செயற்குழுவின் முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக கூறி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சாந்த பண்டார, லசந்த அழகியவண்ண, சுரேன் ராகவன், சாமர சம்பத் தஸநாயக்க, ஜகத் புஷ்பகுமார ஆகிய சிரேஷ்ட உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பை நடத்திய இந்த அணியினர், தமது அணி எந்த வகையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகாது எனக்கூறியிருந்தனர்.
சர்க்கட்சி அரசாங்கம் தொடர்பான யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே முதலில் முன்வைத்ததாக கூறியுள்ள இவர்கள், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதனிடையே அரசியல் நெருக்கடிக்கு பின்னர் சுயாதீன கட்சிகளின் கூட்டணி என்ற பெயரில் சில மாதங்கள் இயங்கி வந்த அணியினர், கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி உத்தர லங்கா சபாகய என்ற பெயரில் கூட்டணியை ஆரம்பித்தனர்.
தேசிய சுதந்திர முன்ணியின் தலைவர் விமல் வீரவங்ச இந்த கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வருவதுடன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் மருத்துவர் ஜீ வீரசிங்க செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.
இந்த கூட்டணியில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, லங்கா சமசமாஜ கட்சியின் பிரதான செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, யுதுகம தேசிய அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
இதனை தவிர பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் 13 பேரை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி சுதந்திர தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் அரசியல் அமைப்பு ஒன்றை ஆரம்பித்தனர்.
இதில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, பேராசிரியர் சரித ஹேரத், கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமண, விரிவுரையாளர் குணபால ரத்னசேகர, லலித் எல்லாவள, கே.பி.எஸ்.குமாரசிறி, மருத்துவர் உபுல் கலப்பத்தி, சட்டத்தரணி உதயன கிரிந்திகொட ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.