யாழில் அத்துமீறி பாடசாலைக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய தந்தை கைது!

யாழில் அத்துமீறி பாடசாலைக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய தந்தை கைது!

யாழில் பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அப்பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று, தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளான்.

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை, ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் அங்கிருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் மீதான இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

ஆசிரியர் ஒருவலை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதன்போதே சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்தேகநபரை கைது செய்யக்கோரி இன்றைய தினம் பாடசாலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தாக்கிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஜே.பொல்வின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் ஆசிரியர்களுக்கு நடைபெறாதவாறு உரிய திணைக்களங்கள், கல்வி சமூகம் பாடசாலை சமூகம் கூடிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ஆசிரியர் சேவை சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர் மீது அதிக நம்பிக்கை கொண்டு மாணவர்களை சீராக நடைமுறைப்படுத்த கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும்போது இ‌த்தகைய செயற்பாடுகளை ஏற்கமுடியாது.

தற்காலத்தில் போதைப் பொருள்களுக்கான பிரச்சினைகள் காணப்படுகின்ற காரணத்தால் கழிப்பறையில் அதிக நேரம் மாணவன் காணப்பட்டதால் சந்தேகம் கொண்டு கண்டித்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது” என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS