மீண்டும் எம்மை வீழ்த்த சர்வதேசம் சதி – மகிந்த குற்றச்சாட்டு

மீண்டும் எம்மை வீழ்த்த சர்வதேசம் சதி – மகிந்த குற்றச்சாட்டு

நாட்டில் சர்வதேசத்தின் தலையீடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும், அவர்களின் நோக்கமே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செயற்படுத்தப்பட்டதாகவும், தெரிவித்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்றார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என குறிப்பிடுபவர்கள், கடந்த காலங்கள் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்தில் அதிக வெளிநாட்டு கடன்களை பெற்றது. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு கடன் பெற்றுக் கொண்டது. இது நாடாளுமன்றமும் நாட்டு மக்களும் அறியாத விடயமல்ல.

பொருளாதார பாதிப்புக்கு தற்போது தீர்வுகாண ஆலோசனை வழங்குபவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்ததை மறந்து விட்டார்கள் என்றார்.

சவால்களை பொறுப்பேற்குமாறு அழைத்தபோது அதனை ஏற்க மறுத்தவர்கள் விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள். வீரவசனம் பேசுபவர்களால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாங்கள், அப்படி வீர வசனங்கள் பேசுபவர்கள் அல்ல. சவால்களை பொறுப்பேற்பது எமது கொள்கையாகும். சவால்களை கண்டு ஒருபோதும் நாங்கள் அஞ்சி ஓடவில்லை என்றார்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதை தடுக்கும் தேசிய மற்றும் சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மீண்டும் எம்மை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்கள் என்றார்.

இந்த நேரத்தில் அரசியல் நோக்கத்திற்காக முரண்பட்டுக் கொள்ளாமல் அரசாங்கம் மாறும் போது மாற்றமடையாத அரசகொள்கையை செயற்படுத்துவது அவசியமாகும் என வலியுறுத்திய அவர், நாட்டில் சர்வதேசத்தின் தலையீடு தீவிரமடைந்துள்ளது. அவர்களின் நோக்கமே கடந்த மாதங்களில் செயற்படுத்தப்பட்டன. திட்டமிட்ட வகையில் பொருளாதாரம் வீழ்த்தப்பட்டது என்றார்.

நாட்டில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைக்கும்,தற்போதைய நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டம் பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்த அவர், இதன்மூலம் அனைவரின் எதிர்காலம் சிறக்கட்டும் ஆகவே, வரவு- செலவுத் திட்டத்துக்கு அனைவரும் திருத்தங்களுடன் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS