தண்டனையை ஏற்று மணல் மூட்டைகளை சுமந்த மன்னன்-வரலாற்றை நினைவூட்டிய கிரியெல்ல

மன்னன் நரேந்திர சிங்கன் அன்று நாட்டின் சட்டத்தை மதித்து 25 மணல் மூட்டைகளை சுமந்துக்கொண்டு பத்தினியம்மன்(கண்ணகியம்மன்) கோயிலுக்கு சென்றதாகவும் எனினும் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பதவி நாட்டின் சட்டத்திற்கு அடிப்பணிவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மன்னன் நரேந்திர சிங்கன் மேல் நாட்டு சட்டத்தை மீறியுள்ளதாக அரச சபை தீர்மானித்த போது, தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக நரேந்திர சிங்கன் கூறினார்.
பத்தினியம்மன் கோயிலை புனரமைப்பதற்கு தேவையான 25 மூட்டை மணலை தோளில் சுமந்து செல்லுமாறு அரச சபை, மன்னருக்கு அறிவித்தது. அரச சபையின் அந்த தண்டனை ஏற்றுக்கொண்டு மன்னர் மணல் மூட்டைகளை தோளில் சுமந்து சென்றார்.
இதனடிப்படையில் அந்த காலத்தில் மன்னரை கூட தண்டிக்கும் சட்டம் நாட்டில் இருந்த போதிலும் தற்போது நாட்டின் தலைவர் சட்டத்திற்கு உட்பட்டவர் அல்ல எனவும் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது எனவும் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.