தென்னிந்தாவையே உலுக்கிய கோர விபத்து -48 வாகனங்கள் மோதல்

புனே – பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல நாவலே பாலத்தில் ஏற்பட்ட விபத்து தென்னிந்தியாவை உலுக்கியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், விபத்தால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானபடி ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
ஞாயிறு (நவம்பர் 20) அன்று நடந்த இந்த விபத்தை அடுத்து, தற்போது சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு படையினரின் அணிகளால், முழுவீச்சில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட இந்த சாலைப் பகுதிகளில் சரிவு அதிகம் இருப்பதால், இங்கு அதிவேகமாக வந்த வாகனங்கள் நிலைதடுமாற, அதனால்தான் இந்த விபத்துகள் கணிசமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது, ஆனாலும் இந்த விபத்துக்கள் இங்கு அடிக்கடி நடப்பது வாடிக்கைதான் என்றும், அதற்கு இப்படியான காரணங்கள் தான் உண்மையான காரணமா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் சுமார் 48 வாகனங்கள் அடிபட்டதுடன், பலரும் காயங்களுடன் புனே தீயணைப்புப் படை மற்றும் புனே பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்துகள் பற்றி பேசும் உள்ளூர் வாசிகள், இங்குள்ள சாலையில் டேங்கர் லொறி ஒன்று சென்று கொண்டிருந்ததாகவும் அதன் பிரேக் எதிர்பாராதவிதமாக திடீரென ஃபெயிலர் ஆனதன் காரணமாகவும் இப்படி நடந்திருக்கலாம் என கருதுகின்றனர்.
அதாவது அந்த டேங்கர் லொறி, தனக்கு முன்புறம் சென்ற வாகனங்களை இடித்ததாகவும், இதனால் உண்டான இந்த விபத்தின் போது எரிபொருள் கசிவு ஏற்பட, அதன் காரணமாக பின்னால் வந்த வாகனங்களின் டயர்களுக்கு சாலையில் பிடிமானம் தவற, அதன் காரணத்தால் அவையும் இந்த விபத்தில் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது.