கடும் மனவருத்தத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்! ஜனாதிபதியின் உதவியை நாட தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உதவியை நாடத் தீர்மானித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணப் போட்டியின் பின்னர் இலங்கை வீரர்கள் மீது சில விளையாட்டுத்துறை அதிகாரிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்ய இலங்கை கிரிக்கெட் அணி தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த குற்றச்சாட்டுகள் காரணமாக வீரர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவிப்பதற்காக நேரத்தை ஒதுக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் அணி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.