மர்ம மம்மிப் பெண்ணின் முகம்-வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

மர்ம மம்மிப் பெண்ணின் முகம்-வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

எகிப்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மம்மியாக பதப்படுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் மாதிரி முக வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்..

இறந்த பிறகு மீண்டும் உயிர் பெற்று வருவோம் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. அதனால் தான் எகிப்தில் உயிரிழந்தவர்களின் உடலை கெட்டுப்போகாமல் பிரமிடுகளுக்குள் மம்மியாக பதப்படுத்தி வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால் எகிப்து முழுவதும் பிரமிடுகளை நிறைய காண முடியும். ஒவ்வொரு பிரமிடும் பல்வேறு ரகசியங்களை கொண்டுள்ளன. அதனால் தான் பிரமிடு ஆராய்ச்சியை பலரும் ஆர்வமுடன் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் ஒவ்வொரு பிரமிடுமே பல அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமான தகவல்களை நமக்கு தந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்திய ஆச்சரியம் ஒன்றை பிரமிடு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருந்த ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அவர் யார், பெயர் என்ன? எப்படி இறந்தார் உள்ளிட்ட விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. அவரது உடல் மம்மியாக பதப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் முக்கிய உடல் பாகங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில் வயிற்றில் இருந்த ஏழு மாத கரு அந்தப் பெண்ணின் இடப்பக்கம் வைக்கப்பட்டு அதவும் பதப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மம்மியை தற்போது தடயவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக வார்சா மம்மி ஆராய்ச்சி குழுவினர் எகிப்திய மர்ம பெண் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக அடையாளம் தெரியாமல் இறந்து பதப்படுத்தப்பட்டிருந்த இந்த பெண்ணின் முகத்தை மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 2-டி மற்றும் 3-டி தொழில்நுட்பங்களின் உதவியுடன் பதப்படுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் முகம், அவர் உயிரோடு இருந்த போது எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கினர் ஆராய்ச்சியாளர்கள்.
அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.பல்வேறு கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் முக மாதிரி தோற்றத்தை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியான பல்வேறு தகவல்களையும் தடயவியல் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதாவது அந்த கர்ப்பிணிப் பெண் தனது இருபது வயதில் இறந்திருக்கக் கூடும் என்றும், உயிருடன் இருந்த போது அவர் புற்றுநோயால் அவதிப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பல் மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றைக் கொண்டு ஒருவரின் முகத்தோற்றத்தை தோராயமாக வரைய முடியும் எனவும், ஆனால் அது நூறு விழுக்காடு உண்மை தோற்றத்தோடு பொருந்தாது எனவும், அதன் அடிப்படையில் எகிப்திய மர்ம பெண்ணின் முக மாதிரியை தங்களால் வெளிக்கொணர முடிந்தது எனவும் கூறுகிறார் இந்த ஆராய்ச்சில் ஈடுபட்ட இத்தாலியை சேர்ந்த தடவியல் மற்றம் மானுடவியலாளர் சந்தால் மிலானி.

மண்ணுக்குள் புதைந்திருக்கும் பிரமிடுகளும் மம்மிக்களும் எத்தனையோ ஆச்சரியங்களை தங்களுக்குள் புதைத்து வைத்திருந்தாலும், அவற்றை நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு வெளிக்கொணரும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சமீபத்திய சான்று.

CATEGORIES
Share This

COMMENTS