இயற்கைக்கான கடன் பரிமாற்ற உடன்படிக்கை குறித்து இலங்கை பேச்சுவார்த்தை

இயற்கைக்கான கடன் பரிமாற்ற உடன்படிக்கை குறித்து இலங்கை பேச்சுவார்த்தை

காலநிலையை மையமாகக் கொண்ட நிதியில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான ‘இயற்கைக்கான கடன் பரிமாற்ற உடன்படிக்கை குறித்து இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் இலங்கை, ஈக்குவடோர் மற்றும் ஆபிரிக்காவின் கேப் வேட் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கை ஒரு பில்லியன் டொலர் வசதிக்காகவும், ஈக்குவடோர் 800 மில்லியன் டொலர்களுக்காகவும், கேப் வேட் 200 மில்லியன் டொலர்களுக்காகவும் பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இலங்கை உட்பட்ட குறித்த நாடுகள், இந்த கலந்துரையாடல் குறித்து தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. அத்துடன் இந்த பேச்சுவார்த்தை எங்கு இடம்பெறுகிறது? எந்த நாடுகள் இந்த நிதியை வழங்கவுள்ளன என்ற விடயங்கள் வெளியிடப்படவில்லை.

இது, எகிப்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் கொப் 27 உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்ட விடயமாகும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கான கட்டணத்தை யார் செலுத்துவது என்பது குறித்து உலகத் தலைவர்கள் எதிர்கொள்ளும் தீர்க்க முடியாத சிக்கலை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்தகைய இயற்கைக் கடன் உடன்படிக்கை அமைவதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

காலநிலை பாதிப்பில் செல்வாக்கு செலுத்தும் வளர்ந்த நாடுகள், அந்த பாதிப்பை எதிர்நோக்கும் வளர்முக நாடுகளுக்கு நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று கோரிக்கையும் கொப் 27 மாநாட்டில் முன்வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This