துமிந்த சில்வா வழக்கு:கோட்டாபயவை பிரதிவாதியாக குறிப்பிட எதிர்பார்ப்பு

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தனிப்பட்ட முறையில் பிரதிவாதியாக குறிப்பிட எதிர்பார்த்துள்ளதாக, உயர் நீதிமன்றில் மனுதாரர்கள் அறிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதிவாதியாக சேர்க்கும் வகையில் மனுவில் திருத்தம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
உண்மைகளை பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள்- காமினி அமரசேகர மற்றும் நீதியரசர் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கசாலி ஹூசைன் ஆகியோர் துமிந்த சில்வாவின் ஜனாதிபதி மன்னிப்பு சட்டத்தில் செல்லாது என அறிவிக்குமாறு கோரி இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
துமிந்த சில்வாவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சிறைச்சாலைக் காவலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை மே 31ஆம் திகதி பிறப்பித்துள்ளது.
அத்துடன் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கி நீதிமன்றம் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது.
அரசியலமைப்பின் 12(1) பிரிவின்படி இந்த விண்ணப்பங்களை தொடர உயர் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் கஸாலி ஹசைன் சார்பாக எம்.ஏ.சுமந்திரன் ஜெப்ரி அழகரட்ணம் ஆகியோரும், பி.சி. சுமன பிரேமச்சந்திர சார்பில் சட்டத்தரணி திமுத்து குருப்புஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் தமிந்த விஜேரத்ன மற்றும் சுந்தரமூர்த்தி ஜனகன் ஆகியோருடன் சட்டத்தரணி எராஜ் டி சில்வா முன்னிலையாகி வாதாடியுள்ளனர்.
சட்டமா அதிபரின் சார்பில் கூடுதல் மன்;றாடியார் நாயகம்- நெரின் புல்லே முன்னிலையாகியுள்ளார். துமிந்த சில்வா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன மற்றும் நவீன் மாரப்பன ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.