சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் உடன் பதவி விலக வேண்டும் – வினோ எம்.பி காட்டம்

சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் உடன் பதவி விலக வேண்டும் – வினோ எம்.பி காட்டம்

சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் தோற்றுப்போன தலைவர்களே அவர்கள் உடனடியாக பதவி வில வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகிய ரெலோ கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோரதராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் நலன் பேணும் அமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வு தொடர்பில் ஆரம்பத்தில் பல சந்தேங்கள் இருந்தது. காலையில் எழுந்தவுடன் இரண்டு மூன்று பத்திரிக்கைள் பார்ப்பது வழமை. யாழ்ப்பாண பிராந்திய பத்திரிகை ஒன்று, இரண்டு பேரை முதன்மைப்படுத்தி அவர்களின் தயார்ப்படுத்தலில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது என்று ஆசிரியர் தலையங்கம் அல்லது வேறு பந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதையும் பார்த்தேன்.

எனக்கு இது தேவையா? இதில் அரசியல் விளையாடப்போகிறதா? இதில் உள்ள சாதக,பாதகம் பற்றி இரண்டு பக்கமும் யோசித்து விட்டு தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். ஒரு நேரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் சம்பந்தன் ஐயாவின் தலைமையில் வவுனியாவில் கூடியிருந்த வேளை, அப்பொழுது யாழ்.ஊடகவியலாளர் முன்னாள் சிரேஸ்ட போராளிகளை அழைத்து வந்து இந்த தேர்தலில் எங்களையும் இணைத்து போட்டியிட வேண்டும்.

போராளிகளுக்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்று கேட்ட போது, ஒரேயடியாக அதற்குரிய தகுந்த காரணம் இப்போது இல்லை.போராளிகளை இப்போது இணைக்க முடியாது என சம்பந்தன் ஐயா சொல்லிவிட்டார். பிறகு அதே ஊடகம் அல்லது அதே ஊடகவியலாளர் எழுத்துக்களெல்லாம் இந்த போராளிகளை யாரோ தவறாக வழிநடத்துகிறார்களாம்.

அன்று தான் செய்கின்ற போது சரியாகபட்டது. இன்று பிழையாகப்படுகின்றது.அந்த ஊடகவியலாளரையோ பிழையாக வழிநடத்துகிறார்களா? போராளிகள் மத்தியில் ஏன் நலன்பேணும் விடயத்தில் திடீர் அக்கறை என போராளிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் அந்த பத்தி ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிற நிலமையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உட்கட்சி முரண்பாடுகள் அது மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை கொண்டு வந்திருக்கின்றது.

உங்களையும் பாதித்து செல்வதால் இந்த விடயத்தை சொல்கின்றேன்.விடுதலைப்புலிகளால், தலைவர் பிரபாகரனால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதனால் அதனுடைய வீழ்ச்சியோ அல்லது மக்களிடம் இருந்து அந்நியப்படுகின்ற ஒரு நிகழ்சித்திட்டமோ எல்லோரையும் பாதிக்கும் எங்களுக்குள் வேறுபாடு இருக்கின்ற போது அதில் உங்களுக்கும் பங்கு இருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற போது தலைவர் விடுகின்ற தவறுகளை அல்லது ஒரு பங்காளிக்கட்சி விடுகின்ற தவறுகளை எப்படி அதில் இருக்கின்றவர்கள் சுட்டிக்காட்ட முடியுதோ அதேயளவுக்கு போராளிகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.

அரசியல் ரீதியாக உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உங்களின் நலன்களிலும் எதிர்காலத்தில் செயற்படக்கூடிய ஒரு அமைப்பு தவறு செய்யும் பட்சத்தில் அதை தடுக்க அல்லது எதிர்த்து குரல் கொடுக்க கூடிய தகைமை உங்களுக்கும் இருக்கின்றது.

அண்மையில் எங்களது கூட்டமைப்பினுடைய தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை. ஒற்றுமையாகத் தான் இருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் பிளவு இல்லை என்ற ஒரு கருத்தை கூறியிருந்தார். அது சுத்தப்பொய்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை. ஒரே கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சினைகள் இருகின்றன. அண்மையில் எங்களுடைய தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவராக இருகின்றவர் அண்ணன் தவராசா அவர்களே ஏற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறிய கருத்து உண்மையானது என அவர் ஏற்றுக் கொண்டார். அப்படியெனில் முக்கிய தலைவர்களே உணர்ந்திருக்கின்றார்கள். தவறுகள் நடக்கின்றது என்பதை அவர்களே உணர்ந்துள்ளார்கள்.

சம்பந்தன் ஐயா அதை மறைக்கப்பார்க்கின்றார். அவரால் தற்போது ஒழுங்காக செயற்பட முடியாது. இதனை பொதுவெளியில் சொல்லவும் நான் தயாராக இருக்கின்றேன். அவரால் செயற்பட முடியாத நிலமை இருக்கின்றது.

அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு கொண்டு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு தலைவர் இல்லாத நிலமை இருந்து கொண்டு இருக்கின்றது.

இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் பாதிக்கப்பட போகின்றது. ஒட்டுமொத்த தமிழர் என்கின்ற போது அதற்குள் விடுதலைப்புலிகள், போராளிகள் அடங்காது எப்படி இருக்க முடியும்.

நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் தலைவருடன் சந்திப்பை ஏற்படுத்துகின்ற போது, நாங்கள் ஒன்றாக பேசிய போது, நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனைப் பார்த்து தலைவர் கூறியுள்ளார்.

‘செல்வம் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவோம்.கடந்த காலங்களில் நாங்கள் எல்லோரும் பிழை விட்டிருந்தால் எல்லாவற்றையும் மறந்து எங்களுடைய மக்களுக்காக இந்த கூட்டை உருவாக்கி அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும்.

நாங்கள் ஒன்றாக இந்த மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருந்தார்’.அதற்கு பின் நாங்கள் எவ்வளவோ விட்டுக் கொடுப்பு செய்து பிரிந்திருந்த போராட்ட இயக்கங்கள், மிதிவாதக் கட்சிகள் இணைந்து இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

ஆனால், இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கூட்டமைப்பு உள்ளது. முதலில் கூட்டமைப்பில் உள்ள பழைய தலைவர்கள் எல்லாம் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து விட்டு போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

போராளிகள் என்று நான் சொல்வது இளைஞர்களை.ஒவ்வொரு கட்சியிலும், இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

எங்களுடைய பழைய தலைவர்கள் எல்லோரும் தோற்றுப்போன தலைவர்களாக தான் இருக்கின்றார்கள். தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், சம்பந்தன் ஆகியோராக கூட இருக்கலாம். தோற்றுப்போன தலைவர்களாக இருக்கின்றார்கள்.

ஏனைய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூட கூட தாங்கள் தொடர்ந்தும் கட்சியினுடைய தலைவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றார்கள். அதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்கக்கூடாது. வேணும் என்றால் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துவிட்டு போகலாம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமை ஊடாக அவர்கள் வரலாம். ஆனால் தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்களின் உடைய தலைவர்கள் எல்லோருமே தோற்றுப்போன தலைவர்கள் தான். மக்களுக்கான விடுதலையை வென்று கொடுக்க முடியாத தலைவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் தலைமைப் பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லாத தலைவர்களாக தான் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது உங்களுடைய விடயம். நீங்கள் போரளிகள். எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, நலன்புரி சங்கம் என்ற பெயரில் போராளிகளின் எதிர்காலம், அவர்களுடைய தேவைகள் தொடர்பாக செயற்படவுள்ளீர்கள். அவர்களுடைய தேவைகள் உண்மையாக உணரப்பட வேண்டும். அவர்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இனத்தின் ஒரு விடுதலைக்காக ஆயுதம் தூக்கிப்போராடிய ஒரே குற்றத்திற்காக இந்த போராளிகள் வெறுக்கப்படுகின்றார்கள். ஒவ்வொரு போராளிகளும் மன ரீதியாக உடைந்து போய் இருகின்றார்கள். அவர்களது மனங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.சிலருடைய நடவடிக்கைகளே இதற்கு காரணம்.

சமூகத்தில் சில இடங்களில் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்கள். உரிய மரியாதை வழங்கப்படுகின்றது.சில இடங்களில் சாதாரண ஒரு போராளியாக கூட மதிக்கப்படாத நிலமை இருந்து கொண்டிருக்கின்றது.

மாற்றுத்திறனாளிகளான போராளிகள் கூட நாங்கள் இந்த இனத்திற்காகவா போராடினோம் என்றொரு ஏக்கம், ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கின்றது. அதனை நாம் உணர்கின்றோம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். தலைவர்கள் ஒரு போதும் ஒற்றுமைப்படப் போவதில்லை.

எனது அனுபவத்தில் அரசியல் தீர்வுக்காய் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஏதோ அரசியல் நடந்து கொண்டு தான் இருக்குமே தவிர, உரிமைக்காக தமிழ தலைவர்கள் என தமிழ் தேசியத்தின் பேரில் சொல்லிக்கொண்டு, அரசியல் நடத்தும் எந்த தலைவரும் உண்மையான அக்கறையாக செயற்படாது தான் உள்ளார்கள்.

நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி தமிழ் மக்களின் உரிமைக்காக கடைசி வரை இணையப்போவதில்லை. விக்னேஸ்வரன் ஐயா அண்மையில் பிரிந்து செயற்படுவது தொடர்பில் நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என கூறியுள்ளார்.

தமிழ் தலைவர்களில் எனக்கு நம்பிக்கையில்லை.ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி சொல்கின்றார்.இவர்கள் விழுந்தடித்துக் கொண்டு பேசுவோம் என்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் ஒன்றுபட்டு போய் அங்கு பேசப்போவதில்லை. ஒரே கட்சியாக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணன் இன்று இரண்டு கட்சியாகிவிட்டார்கள். இதேபோல் நாளை எத்தனை கட்சிகள் எப்படி எப்படி உடையப்போகுதோ தெரியாது.

ரணிலுடன் பேச முற்பட்டால் சிலர் பேச முடியாது, சிலர் நிபந்தனை போடனும், அப்படி, இப்படி என சொல்வார்கள். நாங்கள் ஒன்றுபடமாட்டோம் என அவர்களுக்கு தெரியும். அதனால் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. முன்னாள் போராளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வழங்க அனுமதி தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசினேன்.

ஆனால், அவர்கள் வேறு காரணங்களை கூறி நிராகரித்துவிட்டார்கள்.போராளிகள் மத்தியில் ஒற்றுமை வராது என சொல்வதற்கு இடம்கொடுக்க முடியாது.ஒற்றுமையாக செயற்படுங்கள். அன்று போராளிகளுக்கு உதவி செய்ய போவதாக சொன்ன யாழ்.ஊடகவியலாளர் இன்று இங்கு இருப்பவர்கள் உதவி செய்ய வருவதை குற்றம் சாட்டுகின்றார்.

அன்று அவர் உண்மையில் போராளுக்கு உதவி செய்ய சென்றாரா அல்லது தன்னுடைய நலன்களுக்காக சென்றாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This