🛑 அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்! அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன?

🛑 அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்!   அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன?
🛑19 இல் இல்லாத – 21 இற்குள் புதிதாக உள்வாங்கப்பட்ட ஏற்பாடு எது?
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்திருந்தாலும், அதன் பிரதான நோக்கம் நிறைவேற வேண்டுமானால் முதற்கட்டமாக அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கமைய வெகுவிரைவில் அரசியலமைப்பு பேரவை நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு முன்னர் அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்…
அரச சேவையில், அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பிரதான நோக்கிலேயே அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கியிருந்தாலும், 18 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அந்த ஜனநாயக ஏற்பாட்டுக்கு மஹிந்த ராஜபக்சவால் சமாதி கட்டப்பட்டது. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கும், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் அரசியலமைப்பு பேரவையும் மீள ஸ்தாபிக்கப்பட்டது.
அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இதன் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். (19 அமுலானபோது சபாநாயகராக கருஜயசூரிய பதவி வகித்தார். அவர் தலைவராக செயற்பட்டார்)
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர். அதாவது மேற்படி பதவிகளை வகிப்பவர்கள் பதவிநிலை அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள். ஜனாதிபதியின் பிரதிநிதியொருவர் இடம்பிடித்திருப்பார், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து மேலும் இருவரை தெரிவுசெய்வர். அதற்கு மேலதிகமாக மூன்று சிவில் பிரதிநிதிகளுக்கு (கட்சிசாராத) இடமளிக்கப்பட வேண்டும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்கும் கட்சியை சாராத, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும். ( 19 அமுலில் இருந்தபோது ஜே.வி.பியின் சார்பில் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார்)
21 ஆவது திருத்தச்சட்டத்தில் மேற்படி நடைமுறை மீள (சில திருத்தங்களுடன்) அமுலுக்கு கொண்டுவரபபட்டுள்ளது. இதன்படி நிறுவப்படவுள்ள அரசியலமைப்பு பேரவையில்
பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அரசியலமைப்பு பேரவைக்கு பதவி வழியில் உள்வாங்கப்படுவர். ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்கும் கட்சிகளை தவிர, ஏனைய கட்சி உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படுவார். இந்த வாய்ப்பு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கிடைக்கவுள்ளது.
ஏனைய இரு எம்.பிக்களை பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் கலந்தாலோசித்து நியமிக்கவேண்டும். அதேவேளை, மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படும். இவ்வாறு அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்பட்ட பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.அந்தவகையில்
தேசிய தேர்தல் ஆணைக்குழு
அரச சேவை ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
மனித உரிமைகள் ஆணைக்குழு
இலஞ்சம் , ஊழல் ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு
எல்லை நிர்ணய ஆணைக்குழு
கணக்காய்வு ஆணைக்குழு
தேசிய பெறுகை ஆணைக்குழு
மேற்படி ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியலமைப்பு பேரவையே முக்கிய வகிபாகத்தை வகிக்கும்.
பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகள் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், ஒம்புட்ஸ்மன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியவற்றுக்கான நியமனங்கள், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே இடம்பெறும். ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் முடிவெடுப்பதை, இந்த ஏற்பாடு தடுத்தது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டது. எனினும், ஜனாதிபதியின் முடிவுகளே அங்கம் தாக்கம் செலுத்தின. இந்நிலைமை மாற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய வங்கி ஆளுநர் நியமனம்கூட அரசியலமைப்பு பேரவை ஊடாகவே இடம்பெற வேண்டும். 22 ஊடாக இது புதிதாக உள்வாங்கப்பட்ட விடயமாகும்.
ஆர்.சனத்
raasanath@gmail.com
CATEGORIES
Share This