முன்னாள் கணவனையே காதலித்து கரம்பிடித்த ஆஸி.,பெண்.. ஏன் தெரியுமா? நெகிழ்ச்சி பின்னணி இதோ!

முன்னாள் கணவனையே காதலித்து கரம்பிடித்த ஆஸி.,பெண்.. ஏன் தெரியுமா? நெகிழ்ச்சி பின்னணி இதோ!

காதல் எந்த காலத்திலும் ஏற்படலாம் என்பதற்கு ஆஸ்திரேலியாவின் விவாகரத்தான தம்பதியின் காதல் மறுமலர்ச்சியே உதாரணமாக இருந்திருக்கிறது. ஏனெனில் விவாகரத்தான அந்த தம்பதி மீண்டும் சந்தித்து திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

டேனியல் கர்ட்டிஸ் மற்றும் டிம் கர்ட்டிஸ் என்ற ஜோடி கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்திருந்த நிலையில், 2015ம் ஆண்டு விவாகரத்தாகி மீண்டும் 2019ம் ஆண்டில் திருமணம் செய்திருக்கிறார்கள். 2003ம் ஆண்டு டேனியல் கர்ட்டிஸ் உடன் பல நாட்கள் பழகி வந்ததை அடுத்து டிம் கர்ட்டிஸ் முதலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தவே இருவரும் 2004ம் ஆண்டு கரம் பிடித்தார்கள்.

அதன் பிறகு மூன்று குழந்தைகளுக்கு பெற்றோரான இந்த தம்பதி வழக்கம்போல தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் 2012ம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கர்ட்டிஸ் தம்பதியின் சொந்த வாழ்வும் பாதிக்கப்பட்டது.

ஏனெனில் டிம் கர்ட்டிஸ் வழக்கத்தை விட அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அவ்வளவாக பேச்சுவார்த்தை இல்லாமல் போயிருக்கிறது. இதனையடுத்து கடந்த 2015ம் ஆண்டு கர்ட்டிஸ் தம்பதி பிரிந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் செய்தி தளத்திடம் பேசியுள்ள டேனியல் கர்ட்டிஸ், “விவாகரத்து ஆவணத்தில் டிம் கையெழுத்திட்ட போது அப்போது எனக்கு நிம்மதியாக இருந்தது. அதே சமயத்தில் இதயம் நொறுங்கியது போலவும் இருந்தது. ஏனெனில் அவர் மீதான காதல் குறையவில்லை. இருப்பினும் உள்ளுக்குள்ளயே அதனை புதைத்துவிட்டேன்.” எனக் கூறியிருந்தார்.

இதனையடுத்து கர்ட்டிஸின் குழந்தைகள் தங்களது பெற்றோர் இருவரையும் சந்தித்து வந்தாலும், அவர்களிடையே எந்த பேச்சுவார்த்தையும் இருக்கவில்லை. மாறாக இருவரும் தங்களுக்கான வாழ்க்கை துணையை தேடுவதில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள்.

அதன்படி 2017ம் ஆண்டு ஆலோசகரை அணுகி உரிய ஆலோசனை பெற்ற பின்னர், “எனக்கான நிம்மதியையும் அமைதியையும் பெற வேண்டுமென்றால் டிம்மையும் என்னையும்தான் முதலில் நான் மன்னிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆகையால், நம்முடைய பிரிவிற்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்றும் குழந்தைகளை வெறுக்காமல் தந்தையாக அவர் கவனித்துக் கொண்டதை பற்றியும் குறிப்பிட்டு டிம்மிற்கு இமெயில் செய்தேன்.

ஆறு மாதத்திற்கு பிறகு “நாம் ஏன் தனியாக சந்தித்து பேசக் கூடாது?” என டிம் பதில் மெயில் அனுப்ப, நாங்கள் இருவரும் மீண்டும் சந்தித்ததில் எங்களுடைய காதல் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது. அதன் பிறகு சில நாட்களிலேயே நாங்கள் இளம் காதலர்களை போல சாட்டிங் செய்யத் தொடங்கினோம். என்னுடைய அப்பார்ட்மெண்ட்டுக்கு அடிக்கடி டிம் வந்து போவதுமாக இருந்தார். இவையெல்லாம் எங்களுடைய ஆரம்பகால காதல் நாட்களை நினைவுக்கூர்ந்தது.” என டேனியல் கர்ட்டிஸ் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, சில வாரங்களிலேயே இந்த கர்ட்டிஸ் ஜோடி ஒன்றாக வசிக்கத் தொடங்கியதோடு மீண்டும் மணமுடிக்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி சட்டப்படி இருவரும் அவர்களது குழந்தைகள் முன்னிலையில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

“காதல் உறவுகளை பெறுவது அத்தனை எளிதான செயலாக இருக்காதுதான். ஆனால் சரியான நபருக்காக போராடுவதும், காத்திருப்பதும் மதிப்பு வாய்ந்ததாகவே இருக்கும்” என டேனியல் கர்ட்டிஸ் தெரிவித்திருக்கிறார். இந்த கர்ட்டிஸ் தம்பதியின் காதல் கதை தற்போது சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து வைரலாகியிருக்கிறது.

CATEGORIES
Share This