அமைச்சு பதவிகளை கோரி மொட்டுக்கட்சி ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு கோரி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மீண்டும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு முன்னரும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தார். எனினும் இதற்கு ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தமக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக மீண்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர சாகர காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமைச்சு பதவிகளுக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியலை பொதுஜன பெரமுன இதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது. இது குறித்து மீண்டும் ஆராய்ந்து பார்க்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே விரைவில் ஏற்படுத்தப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படலாம் அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.