முல்லைத்தீவில் 23 வயது பெண்ணை கடத்த முயற்சித்த கனடாவில் இருந்து சென்ற 63 வயது நபர்

முல்லைத்தீவில் 23 வயது பெண்ணை கடத்த முயற்சித்த கனடாவில் இருந்து சென்ற 63 வயது நபர்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருமணமான 23 வயது பெண்ணை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி இந்த கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

23 வயதான பெண் ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில், சிறிது காலத்தினுள் குடும்பத்தினுள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது தனது மனைவிக்கு, அவரது நெருங்கிய உறவினரான 63 வயது நபருடன் காதல் இருப்பதாகத் தெரிவித்து கணவன் ,பொலிஸில் கடந்த மாதம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்போது 63 வயது நபர் கனடாவில் வசித்து வந்த நிலையில் அண்மையில் முல்லைத்தீவுக்கு திரும்பி அங்கு வாழ்ந்து வந்துள்ளார். அவருடன் இணைந்து வாழ விரும்புவதாகவே 23 வயது பெண், பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதன்போது முறைப்பாட்டினை விசாரித்த பொலிஸார் 23 வயது பெண்ணுக்கு அறிவுரை கூறி, பெண்ணை அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பெற்றோரின் வீட்டில் கடந்த ஒரு மாதமாக பெண் தங்க வைக்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆம் திகதி இரவு 23 வயதுப் பெண்ணைக் கடத்திச் செல்ல வந்ததாகத் தெரிவித்து வாகனமொன்றைச் சேதமாக்கிய பெண்ணின் உறவினர்கள், வாகனச் சாரதியையும் தாக்கியுள்ளனர்.

இதன்போது தாக்குதலுக்கு உள்ளான வாகனச் சாரதியும், தாக்குதல் நடத்திய பெண்ணின் சகோதரர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This