சந்திரிகாவின் பாதுகாப்பு அதிகாரி கடத்தப்பட்டார்

முன்னாள் அதிபர் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு, வீடொன்றில் அடைத்து வைத்து 40,000 ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெயங்கொடை காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 02 ஆம் திகதி இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வெயாங்கொடையில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது மைத்துனருடன் மோட்டார் சைக்கிளில் வெயாங்கொடை புகையிரத நிலையத்திற்கு சென்றதாக வெயாங்கொடை காவல் நிலையத்தில் குறித்த காவல்துறை அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் வெயாங்கொடையில் ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த போது, காமினி ஹோல் சந்திக்கு அருகில் நீல நிற வானில் வந்த சிலர் காலி வீதிக்கு செல்லும் வழியைக் கேட்டுள்ளனர். இதனையடுத்து வானில் இருந்து இறங்கிய சிலர் தன்னை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளே இழுத்துச் சென்றதாக அவர் காவல்துறையிடம் கூறினார்.
அவர்கள் தன்னை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கியதாகவும் அவர் கூறினார். அந்த வீட்டில் இரவைக் கழித்ததாகவும், காலையில் ஒருவர் தன்னிடம், “உங்களுக்குச் சரியாக வேலை செய்யத் தெரியாது” என்று கூறியதாகவும் அவர் கூறினார்.
தன்னை திரும்பி கொண்டு சென்று விடுமாறு கூறியதாகவும் அழைத்து வரப்பட வேண்டியவர் அவர் அல்ல என தெரிவித்ததாகவும் சார்ஜன்ட் வெயாங்கொடை காவல்துறையிடம் தெரிவித்தார்.
ரூ.40,000 கொள்ளையடிக்கப்பட்டதாகவும், மீண்டும் கண்ணை மூடிக்கட்டி விரட்டியடித்ததாகவும் அவர் கூறுகிறார். அவர் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பணம் இல்லாததால் ரூ.10,000 ரூபாயை வங்கிக்கு மாற்றுமாறு கூறினார். ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டு வீடு திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, சார்ஜன்டின் மனைவி,வேலைக்கு சென்ற தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்தார். கணவரின் தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாதுகாப்பு கமரா தரவுகளை ஆய்வு செய்து புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.