ரணில் – சந்திரிகா இணைவு சாத்தியமா..! நம்பிக்கை வெளியிட்ட குமார் வெல்கம

சர்வதேச ரீதியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் மாத்திரமே முடியும் என புதிய இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் குமார் வெல்கம நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துடன் தாம் இணைந்து செயற்படப் போவதில்லை என இன்று நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளது போராட்டம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இலங்கையில் அண்மையில் முன்னெடுத்த போராட்டம் ஒரு தோல்வி அடைந்த போராட்டம்.
இந்த போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் அரசாங்கத்தினை தூண்டிவிடப்பட்டது எனக் கலந்துகொண்ட அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
குழப்பத்தை ஏற்படுத்தும் தரப்பினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் அவர்களை இனங்கண்டு உடனடியாக வெளியேற்றி இருக்கலாம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை போராட்டத்தின் போது அகௌரவப்படுத்தியது தவறான விடயமாகும். அவரது தலைமைத்துவத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் அவர் ஒரு நேர்மையான தலைவர்.
கால அவகாசம்
இலங்கையில் நடைபெற்ற பல கலவரங்களை தாண்டி நாட்டின் அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் கால அவகாசம் வழங்க வேண்டும்.
அரசாங்கத்தின் செலவுகளை குறைக்க அதிபர் முயற்சிக்க வேண்டும். இராஜாங்க அமைச்சர்களை வீணாக நியமிப்பதும் ஒரு வீணான செலவு.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கத்திற்கு நிதி உதவி கிடைக்கப்பெற்றாலும் அதுவும் ஒரு கடன் உதவி மாத்திரமே. இவ்வாறாக கிடைக்கப்பெறும் உதவிகளை அதிபர் சரிவர பயன்படுத்த வேண்டும்.
அமைச்சரவை அமைச்சர்களை அதிபர் நியமிப்பதன் மூலம் அவர் எவ்வாறான ஆட்சியை செய்கிறார் என்பதை எதிர்வரும் காலங்களில் புரிந்துகொள்ள முடியும்” – என்றார்.