முறைப்பாடு செய்தால் பணம் கிடைக்காது-செல்வந்தர்களை மிரட்டிய திலினி பிரியமாலி

முறைப்பாடு செய்தால் பணம் கிடைக்காது-செல்வந்தர்களை மிரட்டிய திலினி பிரியமாலி

“பொலிஸில் முறைப்பாடு செய்தால், பணம் கிடைக்காது” எனக்கூறி திக்கோ நிறுவனத்தின் உரிமையாளராக திலினி பிரியமாலி, சிறையில் இருந்து தொலைபேசி மூலம் செல்வந்தர்கள் உட்பட சிலரை அச்சுறுத்தியுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

மூன்று தொலைபேசிகளை பயன்படுத்திய திலினி பிரியமாலி
திலினி பிரியமாலிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் சம்பந்தமான 14 வழக்குகள் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அப்போதே குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் இந்த தகவலை நீதிமன்றத்திடம் கூறியுள்ளனர்.

சந்தேக நபரான திலினி பிரியமாலி சிறையில் மூன்று தொலைபேசிகளை பயன்படுத்தி, வெளியில் இருப்பவர்களுக்கு அழைப்புகளை எடுத்துள்ளார். இந்த தொலைபேசி அழைப்புகளில் 6 முக்கிய தொலைபேசி எண்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றவியல் விசாரணை திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் திலினி பிரியமாலி, சிறையில் இருந்தவாறு திக்கோ நிறுவனத்தின் பல அதிகாரிகளை தொடர்புக்கொண்டுள்ளார். சிறையில் இருக்கும் சந்தேக நபர் ஒருவர் வெளியில் இருக்கும் விடயங்களை கட்டுப்படுத்துவது பாரதூரமான நிலைமை எனவும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பிணை வழங்க மறுத்துள்ள நீதவான்
அதேவேளை சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் இருக்கும் நிலையில், சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், சந்தேக நபரான பிரியமாலி எப்படி இவ்வாறு செயற்பட முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

திலினி பிரியமாலி, சிறையில் இருந்தவாறு வெளியில் உள்ளவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டமை தொடர்பான விடயங்கள் வெளியாகியுள்ளமை மற்றும் இந்த சம்பவம் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ள நிலையில், சந்தேக நபருக்கு பிணை வழங்கினால், மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பலாம் என கூறிய நீதவான் திலின கமகே, சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து திலினி பிரியமாலியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS