சாணக்கியனுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையா…! வியாழேந்திரன் சந்தேகம்

சாணக்கியனுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையா…! வியாழேந்திரன் சந்தேகம்

“2009ஆம் ஆண்டு மே மாதம் இந்நாட்டில் யுத்தம் முடிவடையாவிட்டால் சாணக்கியன் உள்ளிட்ட பலர் இலங்கைக்கு வந்திருக்கமாட்டார்கள்.” என இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதிகளவில் ஆர்ப்பாட்டங்களைச் செய்தவர்கள் நாங்கள்

இதன்போது தொடர்ந்து பேசிய இராஜாங்க அமைச்சர், “பிரச்சினைகளை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருப்பது இலகுவான விடயம். நான் 2015 தொடக்கம் 2019 வரை எதிர்க்கட்சி அரசியல் செய்தவன். மட்டக்களப்பில் அதிகளவில் ஆர்ப்பாட்டங்களைச் செய்தவர்கள் நாங்கள்தான். கிட்டத்தட்ட 42 ஆர்ப்பாட்டங்கள். அனேகமானோர் எம்மைக் கேலி செய்திருக்கின்றார்கள்.

காந்தி பூங்காவை உங்களது பெயர் எழுதி வைத்திருக்கின்றீர்களா எனக் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய ஒருவர் எம்மிடம் கேட்டார். இன்று அவரும் அதே இடத்தில்தான் குந்திக் கொண்டிருக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4 இலட்சம் வாக்காளர்களில் எமக்கு வாக்களித்தவர்கள் 34 ஆயிரம் பேர். ஆனால், முழுப் பிரச்சினைகளையும் நாங்கள்தான் முடித்துக் கொடுக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்சவுடன் பல தடவைகள் பேச்சு
பிரச்சினையைக் கூறுவது மாத்திரம் அல்ல பிரச்சினைக்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நாங்கள் பல தடவைகள் பேச்சுகளை மேற்கொண்டோம்.

இதன் அடிப்படையிலேயே ஒரே தடவையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தீபாவளி தினத்தன்றும் 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாங்கள் வெறுமனே அபிவிருத்தி சார்ந்த அரசியலை மாத்திரம் செய்யவில்லை. உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியல் மாத்திரம்தான் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கும் என்ற யதார்த்தமான அரசியலைக் கையில் எடுத்துள்ளோம்” என்றார்

CATEGORIES
Share This