இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா மற்றும் சீனா

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா மற்றும் சீனா

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவும் இந்தியாவும் தமது நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கு முன்னர் இரண்டு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுமாறு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடன் வழங்குநர்களின் நிபந்தனை

இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களான சீனா மற்றும் இந்தியாவுடனான கடனை மறுசீரமைக்காமல் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முன்வைக்கப்பட்ட 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விடுவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், சீனாவுடனான ஆரம்பக் கருத்துப் பரிமாற்றத்தின் போது, ​​கடனை மறுசீரமைப்பதற்கு முன்னர், தம்முடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும் என, சீனா இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இலங்கை 1998ஆம் ஆண்டு இந்தியாவுடன் இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், தங்களுக்கும் இதேபோன்ற வாய்ப்பு தேவை என்று சீனா கருதுகிறது.

எக்டா உடன்படிக்கை

இதேவேளை, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னர் எக்டா உடன்படிக்கை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என இந்தியா இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நாட்டில் இந்திய முதலீடுகள் மற்றும் சேவை விநியோக வணிகங்களுக்கு வரி விலக்கு அளிக்கிறது.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும் முடிவடையும் வரையில் சீனாவும் இந்தியாவும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்காது என்று தெரிய வந்துள்ளது.

இரு நாடுகளுடனான கடனை மறுசீரமைக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வழங்குவது மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This