மக்களை குழப்பி அரசியல் செய்யவில்லை – மீளெழுச்சி பேரணியில் மகிந்த உரை

மக்களை குழப்பி அரசியல் செய்யவில்லை – மீளெழுச்சி பேரணியில் மகிந்த உரை

இலங்கையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை காரணம்காட்டி மக்களை குழப்புவதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியாதென முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் இன்று புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டத்தில் கலந்து கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச, நாட்டுக்காக தமது கட்சி இதுவரை எந்தவொரு தவறான தீர்மானத்தையும் எடுத்தது இல்லை எனவும் இனிமேல் அவ்வாறான தீர்மானங்களை எடுக்காது எனவும் உறுதியளித்துள்ளார்.

மீளெழுச்சி பேரணி

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து மக்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் காரணமாக ராஜபக்ச தரப்பினரின் ஆட்சி கடந்த ஜூலை மாதம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

இந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் மக்கள் மத்தியில் தமது பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி தமது பொதுக் கூட்டத்தை களுத்துறையில் ஆரம்பித்த மஹிந்த தரப்பினர், அதன் பின்னர் 2 ஆவது கூட்டத்தை தலவாக்கலையிலும், மூன்றாவது கூட்டத்தை இனறு புத்தளத்திலும் நடத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச,

“இலங்கையின் இன்றைய நிலையில் இருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும். மாறாக அதனை பின்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட கூடாது.

இலங்கையில் நாம் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம். அவற்றை செயற்படுத்திக் கொண்டு வரும்வேளை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிட்டது.

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குபவர்களுக்கு உதவுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். இதற்கான சரியான செயல்முறையை திட்டமிட்டு நாட்டில் நடைமுறை படுத்த வேண்டும்.

பிரச்சினைகள் அனைத்தையும் ஒரேடியாக தீர்க்க முடியாவிடினும் ஒவ்வொன்றாய் தீர்க்க நாம் முயற்சிப்போம். இலங்கையில் தற்போது இருக்கும் பிரச்சினைகளை எதிர்நோக்க கூடியவர்களுக்கு மாத்திரமே அவற்றை வெற்றி கொள்ள முடியும்.

அதற்கு அன்றும் இன்றும் என்றும் ஆயத்தமாக இருப்பவர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர். கட்சி, இனம், மதம் போன்றவற்றை மறந்து நாம் ஒன்றுபட்டு செயல்பட்டால் இலங்கையின் நிலையை வெகு விரைவில் மாற்றலாம்” என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS