பொதுஜன பெரமுவின் எம்.பிக்கள் ஐ.தே.கட்சிக்கு செல்லவிருப்பது இரகசியமல்ல-டிலான் பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சிக்கு செல்ல போகின்றனர் என்பது இரகசியமானது அல்ல என அந்த கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
நான்தான் ரணிலின் புரோகிதர்
நான்தான் இங்கு இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் புரோகிதர். என்னைதான் எல்லோரும் சந்திப்பார்கள் என என இரவு நேர விருந்துகளுக்கு செல்லும் பதுளையை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறி வருகிறார்.
ரொஷான் ரணசிங்க, பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவார் எனவும் மினுவங்கொடையை சேர்ந்த பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த மிகப் பெரிய அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து போட்டியிட தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
கண்டி மாமூத் பெண்கள் பாடசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பொதுஜன பெரமுனவை சேர்ந்த 30 முதல் 40 பேர் வரை இவ்வாறு அடுத்த தேர்தலில் ஜனாதிபதியுடன் இணைந்து போட்டியிடுவார்கள் என தகவல் கிடைத்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்படலாம் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக பொதுஜன பெரமுனவை சேர்ந்த அந்த அணியினர் ஏற்கனவே ஜனாதிபதியுடன் சில முறை பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.