சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்!ஐக்கிய தேசியக்கட்சியில் இணையும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுமார் 40 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு பலர் தயாராக இருப்பதாகவும், ஆனால் எப்போது வருவார்கள் என கூற முடியாது எனவும் ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய சில புள்ளிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்து. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தக் கூட்டணி போட்டியிடும் எனவும், ‘அன்னம்’ புதிய கூட்டணியின் சின்னமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கண்டி, கம்பஹா, காலி, பொலனறுவை, பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக்கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.