கோரவிபத்தை பொருட்படுத்தாமல் தக்காளியை திருடிச்சென்ற பொதுமக்கள்

பீகாரில் ஒரு வாகன விபத்தில் அடிபட்டு இறந்து கிடந்த நபரை கண்டுகொள்ளாமல் சிதறிக்கிடந்த தக்காளியை மக்கள் திருடிச்சென்ற வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்திலுள்ள மாவட்டத்தின் மனியாரி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு பயங்கர விபத்து நடந்தது. எதிரெதிரே வந்த இருசக்கர வாகனமும் தக்காளி ஏற்றிவந்த டெம்போவும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. அதில் மகந்த் மனியாரி பிஷன்புர் பகுதியைச் சேர்ந்த அஷோக் தாகூர் என்பவரின் மகன் விஜய்குமார் (45) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஆனால் விபத்தை பொருட்படுத்திக்கொள்ளாத உள்ளூர் மக்கள் டெம்போவிலிருந்து சிதறிய தக்காளியை அங்குமிங்கும் ஓடி எடுத்தனர். பொதுமக்கள் தக்காளியை திருடிச்செல்லும் காட்சியானது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
விபத்தில் உயிரிழந்த விஜயகுமாரின் உடலை போலீசார் எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.