ஸ்தம்பிக்கப் போகும் கொழும்பு..! தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஸ்தம்பிக்கப் போகும் கொழும்பு..! தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும், விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய மகளிர் சக்தி, முன்னிலை சோசலிச கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட பிரதான கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்கார்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் (25.10.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவர் ஹிருணிகா பிரேமசந்திர கூறுகையில், எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ள தரப்பினருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிப்பர் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மக்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் விரைவில் தேர்தலை நடத்துமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை களனி பல்கலைக்கழத்திற்கு முன்பாக கடந்த 18ஆம் திகதி அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This