கோட்டாபயவினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளார்.
முன்னர் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்த ஆணைக்குழுக்கள், அத்தகைய தவறான செயல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கடுமையான மீறல்கள் மற்றும் பிற கடுமையான குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளனவா என்பதைக் கண்டறிய நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸின் தலைமையில் இந்த ஆணைக்குழு கோட்டாபயவினால் அமைக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தையே ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளார்.
திருத்தங்கள் மற்றும் கைதிகளின் விடுதலை
கடந்த மாதம், வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், குறித்த இந்த ஆணைக்குழு மற்றும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளின்படி, முற்போக்கான திருத்தங்கள் மற்றும் கைதிகளின் விடுதலை போன்றவை காத்திருக்கின்றன என்று தெரிவித்திருந்தார்.
இந்த ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோரும் அடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் தற்போது 2022 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட 75 குடியிருப்பாளர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் ஆணைக்குழு ஏற்கனவே பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
கடத்தல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்த 2015 ஆம் ஆண்டு பரணகம ஆணைக்குழுவின் பரிந்துரைகள், ஆராயப்பட்டு நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உரிய முறையில் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.