இலங்கையின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி நுழைந்த ட்ரோன் கருவி! விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையின் மிக பெரிய நீர்மின் நிலையமான விக்டோரியா அணையின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கருவி மற்றும் கமெரா மூலம் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்த 7 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் எந்தவொரு அனுமதியும் இன்றி சட்டவிரோதமான முறையில் அணைக்கட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
இதன்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிகம மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.