கோட்டாபயவின் சர்வாதிகாரத்தைத் தோற்கடிக்கவே 22 ஐ ஆதரித்தோம்! – சஜித் சூளுரை

கோட்டாபயவின் சர்வாதிகாரத்தைத் தோற்கடிக்கவே 22 ஐ ஆதரித்தோம்! – சஜித் சூளுரை

அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை ஆதரித்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்திருந்த 21 ஆவது திருத்தமே நாட்டுக்குச் சிறந்தது. அப்படியொரு நல்ல விடயம் இருந்தும் 22 ஆவது திருத்தத்தைக் கோட்டாபயவின் சர்வாதிகாரத்தைத் தோற்கடிப்பதற்காகவே ஆதரித்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று (22) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த காலங்களில் மக்களுக்காக முன்நின்ற மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் சுயாதீன தலைவர்களைப் பதவி நீக்கம் செய்ய முயற்சி நடக்கின்றது.

கடுமையான நடவடிக்கை
இவ்வாறு அரச அதிகாரத்தைத் தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம். எப்போதும் மக்களுக்காகவே முன்நின்ற தேர்தல் ஆணைக்குழு தலைவர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோரின் சுயாதீனத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்நிற்கும். அந்தத் தலைவர்களின் கடமைகளில் தலையிடாமல் முடிந்தால் தேர்தலை உடன் நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுகின்றோம்.

நல்லாட்சிக்காகவே 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தோமேயன்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி ரோஹினி மாரசிங்கவையோ அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவாவையோ வீட்டுக்கு அனுப்புவதற்காக அல்ல.

இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அவ்வாறு அரசு செயற்பட முற்பட்டால் எந்நேரத்திலும் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்குவோம் என்றார்.

CATEGORIES
Share This