மகிந்தவுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் கோட்டாபய-உதயங்க வீரதுங்க

மகிந்தவுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் கோட்டாபய-உதயங்க வீரதுங்க

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளுக்குள் பிரவேசித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்களுடன் இணைந்து மகிந்தவின் அரசியலுக்கு எதிராக செயற்படும் கோட்டாபய

பொதுஜன பெரமுனவின் அரசியலில் இருந்து அண்மையில் விலகிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.

அவர்களுடன் மகிந்த ராஜபக்சவின் அரசியலுக்கு எதிராக செயற்படுவதை மிக தெளிவாக காணக்கூடியதாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சமூக வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் 69 லட்சம் மக்களின் எதிர்பார்ப்புகளை கோட்டாபய ராஜபக்சவே அழித்தார். நான் பழைய விடயங்களை வெளியிட்டு வருவதால், கோட்டாபய ராஜபக்ச என்னுடன் கடும் கோபத்தில் இருக்கின்றார். கடும் அழுத்தத்தில் இருக்கின்றார். இது அவருக்கு பொருத்தமற்றது என்பதால், மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல முயற்சிப்பதே நல்லது.

மகிந்தவுக்கு சந்திரிக்கா கூட இப்படியான தடைகளை ஏற்படுத்தியதில்லை

சந்திரிக்கா கூட தனக்கு இப்படியான செயல்களை செய்யவில்லை என மகிந்த அண்ணன் அண்மையில் கூறியிருந்தார். அது உண்மையாக அவர் கூறிய விடயம். மகிந்த அண்ணனுக்கு சந்திரிக்கா எப்படியான தடைகளை ஏற்படுத்தினார் என்பதை முழு நாடு அறியும். அதனை விட தடைகளை கோட்டாபய அண்ணன் ஏற்படுத்தினார்.

கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு தனிப்பட்ட ஜெட் விமானத்தில் சென்றார். அதற்கு செலவிடக்கூடிய நபர்கள் இருந்தனர். யார் அதற்கான பணத்தை செலவிட்டனர் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான இலங்கையின் ஊடக நிறுவனம் ஒன்றின் பிரதானி சிங்கப்பூரில் அனைத்து கட்டணங்களையும் செலுத்தினார்.

சுசில் பிரேமஜயந்தவுக்கு ரஷ்ய ஜனாதிபதியை அல்ல அவரது சாரதியையும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தை அவரிடம் கையளிக்க ரஷ்யா சென்ற கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி புட்டினை அல்ல அவரது சாரதியையும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரஷ்ய ஜனாதிபதி வழங்கிய கடித்தை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர் தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து விட்டு வந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்ய அரசின் கடன நிவாரணம் கிடைக்கும் என ரஷ்யா சென்ற தூதுக்குழுவினர் கூறினாலும் நான் அறிந்த வரை அப்படியான கடன் நிவாரணத்தை வழங்க அந்நாடு இணங்கவில்லை.

இலங்கைக்கு ரஷ்யாவின் கடன் நிவாரணத்தில் எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை தூதுக்குழுவனர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. ரஷ்யாவுக்கு சென்ற தூதுக்குழுவினரில் ஒருவருக்கு ரஷ்யாவுக்கு சென்று வர விமானப் பயணச்சீட்டுக்கு மாத்திரம் தலா மூன்று மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.

ரஷ்யா கடனுக்கு எரிபொருளை வழங்காது

4 ஆயிரம் டொலர்கள் ஏனைய செலவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்தளவு பணத்தை செலவிட்ட போதிவும் ரஷ்யா எவ்வித பெட்ரோலிய உற்பத்திகளையும் கடனுக்கு வழங்க தயாரில்லை.

முற்பணத்தை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு ரஷ்ய அதிகாரிகள், இலங்கை தூதுக்குழுவினருக்கு அறிவித்துள்ளனர். இந்த பயணத்தில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு இரு நாடுகளுக்கு இடையில் பல்கலைக்கழக மாணவர்களை பரிமாறிக்கொள்ளும் உடன்படிக்கையையே ரஷ்ய அரசுடன் செய்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது.

எனினும் அதற்கான அக்கறை காட்டப்படவில்லை. நாடு டொலர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்நிய செலாவணியை செலவு செய்து ரஷ்யாவுக்கு பிரயோசனமற்ற பயணத்தை மேற்கொண்டுள்ளனர் எனவும் உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This