பிரித்தானியாவை பேரழிவுக்கு உள்ளாக்க முயற்சி – லிஸ் ட்ரஸின் பதவிக்கு காலக்கெடு

பிரித்தானியா மீண்டும் ஒரு அரசியல் தளம்பலுக்குள் சிக்கியுள்ளது. பிரதமர் லிஸ் ட்ரஸ் நேற்று நிதியமைச்சர் குவாசி குவார்டெங்கை பதவி நீக்கம் செய்த பின்னர் அவருக்குப் பதிலாக முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜெர்மி ஹன்டுக்கு நிதியமைச்சு பொறுப்பு வழங்கினாலும் சமகால அரசியல் நிலவரங்கள் பிரதமர் லிஸ் ட்ரஸின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் லிஸ் ட்ரஸ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள பிரித்தானிய எதிர்க்கட்சிகள் லிஸ் ட்ரஸ் நாட்டின் பொருளாதாரத்தை பேரழிவுக்கு உள்ளாக்கிய பின்னர் பிரதமர் தனது அதிகாரத்தை முக்கியமாக கருதுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
அரசியல் கொதிநிலை
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவரது அரசாங்கம் பகிரங்கப்படுத்திய வரவு – செலவுத்திட்ட அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்ட வரிக்குறைப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக அடித்திருந்த நிலையில் வேறுவழியின்றி இந்த விடயங்களை நேற்று மீளெடுத்த பிரதமர் நிதியமைச்சரையும் பதவி நீக்கம் செய்து புதிய நிதியமைச்சரை நியமித்திருந்தார்.
ஆனால் தற்போது இந்த கொதிநிலை லிஸ் ட்ரசின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக அவரது கென்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர் இந்த வருட இறுதிக்கிடையில் பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
ஆயினும் கட்சியில் இன்னொரு தரப்போ மீண்டும் ஒரு பிரதமரை பதவியில் இருந்து வெளியேற்ற முடியாதென்பதால் கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருந்து பிரதமருக்கு ஆதரவை வழங்க முயற்சிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
பேரழிவுகரமான பொருளாதார தாக்கம்
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவை பேரழிவுக்கு உள்ளாக்க முயற்சிப்பதால் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று காலை தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர் உரையில், ட்ரஸ் அரசாங்கம் பிரித்தானிய அரசியலில் ஏற்படுத்திய குழப்பங்களுக்கு வரலாற்று முன்னுதாரணங்கள் எதுவும் இல்லையென விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் புதிய நிதியமமைச்சர் ஜெரமி ஹன்ட் பிரித்தானியாவின் பேரழிவுகரமான பொருளாதார தாக்கங்களை தடுக்க பொதுச் செலவினங்கள் குறைக்கப்படவேண்டும் எனக் கோரியுள்ளார்.