இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசடி..! ஆணைக்குழு நோக்கி விரையும் குழு

இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசடி..! ஆணைக்குழு நோக்கி விரையும் குழு

சீனி மோசடியுடன் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய இளைஞர் சக்தியின் பிரதிநிதிகள் இன்று(14) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டதால், அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு வர்த்தகர் உடனடியாக இலங்கைக்கு பாரிய அளவில் சீனியை இறக்குமதி செய்தார்.

வரிச்சலுகையால் சந்தையில் சீனிக்கான விலை குறையாததால், அரசாங்கத்திற்கு சார்பான நட்பு வட்டார தொழிலதிபருக்குச் சொந்தமான நிறுவனம் வரம்பற்ற இலாபம் ஈட்டியது.

வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசடி

இது இந்நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசடி என்பதோடு, இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1580 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து, பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் பூரண விசாரணையை முன்னெடுக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் ஐக்கிய இளைஞர் சக்தியின் பிரதிநிதிகள் ஏலவே முறைப்பாடுகளை பதிவு செய்து அதன் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இன்று இரண்டாம் தடவையாகவும் விஜயம் செய்தனர்.

அரசாங்கத்திடம் இந்த வரிப்பணம் இருந்திருந்தால்,இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் ஓரளவேனும் நிவாரணம் வழங்கியிருக்க முடியும் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாநக்க இதன் போது சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க,ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவர்களில் ஒருவரான அனுராத விமலரத்ன,சட்ட விவகார செயலாளர் மாதவ ஜயவர்தன,ஊடக செயலாளர் லிஹினி பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This

COMMENTS